தூய்மைப் பணி.. வடை சுட்டு.. இஸ்திரி போட்டு வாக்காளர்களை கவரும் வேட்பாளர்கள்.. உள்ளாட்சி தேர்தல் கலகல
திண்டுக்கல் : தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வடை சுடுவது, துணி இஸ்திரி செய்வது, காய்கறி விற்பது என சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை போல களத்தில் கலக்கி வருகின்றனர் வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள்..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் இதுவரை சந்தித்திராத வகையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர், அமமுக, எஸ்டிபிஐ, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளோடு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்ற விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை நகப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ளனர். இது மட்டுமல்லாது தங்கள் வார்டுகளில் அதிக செல்வாக்குள்ள பலரும் கட்சிகளில் சீட்டு கிடைக்காததால் சுயேட்சையாக களம் இறங்கி பலம் பொருந்திய அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

தீவிர பிரச்சாரம்
தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் வாக்கு சேகரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் வேட்பாளர்கள். தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை போல பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். திண்டுக்கல் வார்டு பகுதியில் போட்டியிடும் முன்னாள் மேயர் மருதராஜின் மகனான பிரேம் என்ற வீரமார்பன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தூய்மை பணியாளர்களுடன் சென்று வார்டு பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொண்டார். மேலும் தன்னை உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் தொகுதியில் சுகாதாரம் மேம்படுத்தப்படும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்க தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்..

துணிகளுக்கு இஸ்திரி
திண்டுக்கல் 14வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சரவணன் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களை காலை மாலை என இருவேளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். வாக்கு சேகரிக்கும் போது துணி இஸ்திரி செய்து கொடுப்பது டீ போடுவது என சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை போல செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அவரும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

வேட்பாளர்கள் யோசனை
இதேபோல மற்ற பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் காய்கறி விற்பது டீக்கடையில் டீ போடுவது வடை சுடுவது வரை விற்பனை செய்வது என தங்களுக்கு தெரிந்த அனைத்து "கலைகளையும்" களத்தில் இறக்கி பணியாற்றி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை அதிரடி பிரச்சாரத்தால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் வேட்பாளர்கள் மக்களை கவர என்ன செய்யலாம் எனவும் யோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications