மாதவன் வீட்டு தீபாவளியில் அஜித்! அட்டகாசமான துபாய் பங்களா? டிரெண்ட் ஆன வீடியோ
துபாய்: நடிகர் மாதவனின் வீட்டு தீபாவளியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் முன்பு எல்லாம் அஜித் பற்றிய செய்திகள் அதிகம் அடிபடாது. அவர் அந்த உலகத்திலிருந்து வெகுதூரம் தள்ளியே வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய செய்திகள் ஏதேனும் தவறாக வந்தால் மட்டுமே உடனடியாக அவரது மேலாளர் வழியாக மறுப்பு தெரிவிப்பார். சில நாட்கள் முன்னதாகக் கூட, அவர் பெயரில் ஒரு இணையதளம் வெளியான போது அதைப் புறக்கணிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இப்போது அஜித் முன்பு போல் இல்லை. அடிக்கடி அவரைப் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது கூட அவர் தொடங்கியுள்ள கார் ரேஸ் அணி பற்றிய செய்திகள் பெரிய அளவில் கவனத்தைக் கவர்ந்தது.
அஜித் தனது தலைக்கவசத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முத்திரையைப் பயன்படுத்தி இருந்ததற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அந்த விளையாட்டுத்துறை செய்தியைக் கூட பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் அரசியல் ரீதியாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில்தான் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா தங்களுடைய துபாய் வீட்டில் தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருந்தனர். அது குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேகமாகப் பரவியது. அதில் என்ன பெரிய விஷேசம்? லட்சக் கணக்காக மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதானே? என்று நினைக்கலாம் அங்குதான் டிவிஸ்ட் இருந்தது. மாதவன் வீட்டு தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தில் அஜித் பங்கேற்றுள்ளார். எனவேதான் அந்தச் செய்தி வைரலானது.
மாதவனின் மனைவி சரிதா பகிர்ந்த வீடியோ பதிவு ஒன்றில் வீட்டின் பூஜை, உணவு மேஜை, சாப்பாடு பரிமாறுதல், சுமையான இனிப்பு பண்டங்கள் என பல விசயங்களைப் பதிவு செய்துள்ளனர். வீடும் விளக்கொளியில் இரவில் மிகப் பிரகாசமாக இருக்கிறது. மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த மாதவனின் துபாய் வீடு தனி பங்களாவைப் போல ஆடம்பரமாக இருக்கிறது. மாதவனின் வீட்டு விருந்தாளியாக அஜித் பங்கேற்றுள்ளார். அந்தக் காட்சியும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்க இருக்கிறார். அதற்காக தனது அணியுடன் கார் ரேசிங் பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வருகிறார். மாதவனும் அஜித்தும் படங்களில் இணைந்து நடித்தது இல்லை. ஆனால், இருவருக்கு இடையே ஒரு அன்பும் நட்பும் இருந்துள்ளதை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 'உங்கள் இருவரையும் திரையில் சேர்ந்து காண விரும்புகிறோம்' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மாதவனின் மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்து மதத்தின் இதிகாசமான ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்று தீமை விலகி வரும் நன்மைக்கான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இராவணனை வீழ்த்தி பிறகு 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பின் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் அயோத்திக்குத் திரும்பிய நாளைதான் தீபாவளியாக கொண்டாடுகிறோம். பாரம்பரியத்தின் படி, ராமர், சீதை, லட்சுமணனை வீட்டிற்குள் வரவேற்க, அயோத்தியில் உள்ள மக்கள் தெருக்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாகக் கூறப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் 'அலைபாயுதே' மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். அந்தப் படத்தில் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் லவ் ஸ்டோரிகளில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வாரம்தான் ஷாலினி மாதவனுடன் எடுத்த செல்ஃபியை 'என்றென்றும் புன்னகை' எனத் தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார்.
அலைபாயுதே படத்தில் மாதவனின் அறிமுகப் பாடலின் தொடக்க வரிதான் அது. அந்தப் பதிவில் ஷாலினி மீண்டும் நடிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி இருந்தனர். அந்த மனதைக் கவரும் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுக்க ரசிகர்களின் பல நினைவுகளைக் கிளறிவிட்டிருந்தது.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் பற்றிய அப்டேட் செய்திகளுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் பல காலமாக இழுத்துக் கொண்டுள்ளது. அதைவைத்து நெட்டிசன்கள் பலர் கலாய்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள். மறுபுறம் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications