லிஃப்ட்ல இப்படி ஒரு சர்ப்ரைஸா! திரும்பி பார்த்து ஷாக்கான இந்திய தொழிலதிபர்.. நெகிழ்ச்சி சம்பவம்
துபாய்: எதிர்பாராத விதமாக, ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமரை சந்தித்த தருணம் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என இந்தியாவின் தொழிலதிபர் அனஸ் ரஹ்மான் ஜுனைத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹுருன் இந்தியா எனும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத், தனது குடும்பத்தினருடன் துபாயில் ஜாலியாக விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, இவர் குடும்பத்துடன் அட்லாண்டிஸ் தி ராயல் ஓட்டலில் 22வது மாடியில் லிஃப்டில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒருவர் திடீரென இவர்களுடைய லிஃப்டில் நுழைந்தார்.

திரும்பி பார்த்த இவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில் லிஃப்டில் ஏறியது ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்தான். இது ஒரு நெகிழ்ச்சியான தருணம். இதனையடுத்து ஜுனைத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மிகவும் இனிமையாக இருந்ததாகவும், இதனை தன்னுடைய வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், பிரதமரை சந்தித்த அனுபவம் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, "நாங்கள் இவரை எதிர்பார்க்கவே இல்லை. அவரிடம் பேசியபோது அவ்வளவு எளிமையாக பேசினார். எங்களுக்கு இது கனவா, நிஜமா என்பதே தெரியவில்லை. எங்கள் மகளிடம் அவ்வளவு நட்பாக பழகினார். நாங்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டோம். அவர் அதற்கு தாராளமாக அனுமதித்தார்.
என்னுடைய மனைவிக்கு இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. இப்போது அவளுக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்த லிஃப்ட் இதுதான். ஏற்கெனவே நாங்கள் இவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் பிரதமராக இருந்தாலும் எவ்வித பந்தாவும் இல்லாத நபராக இருக்கிறார் என்றும், மக்களிடம் அன்பாக பேசுகிறார் எனவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதை நாங்களே நேரில் அனுபவித்தபோதுதான், மற்றவர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்று எங்களால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அவ்வளவு அன்பாகவும், அக்கறையாகவும் பிரதமர் இருந்தார். பொதுவாக அரசியல் தலைவர்கள் சிரிக்க மாட்டார்கள். ஆனால், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் எங்களுடன் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டார்" என்று ஜுனைத் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications