ஸ்பான்சர் கூட வேண்டாம்.. 48 மணி நேரத்தில் வீடு தேடி வரும் அமீரக விசா.. 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்
துபாய்: சுற்றுலா துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் அமீரகம் இது தொடர்பாக பல புதிய திட்டங்களையும் விசாக்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி அமீரகம் அறிமுகப்படுத்திய ஒரு விசா திட்டம் தான் 5 ஆண்டு செல்லுபடியாகும் மல்டிப்பில் என்டரி சுற்றுலா விசா! இது ஏன் முக்கியம் இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
கச்சா எண்ணெய் காரணமாக குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை அடைந்த நாடுகளில் ஒன்று அமீரகம். இருப்பினும், கச்சா எண்ணெய் தேவை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அது சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி அதை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுற்றுலா விசா
அதன்படி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஐக்கிய அமீரகம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் மல்டிப்பில் என்டரி சுற்றுலா விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவின் கீழ் தகுதியான வெளிநாட்டு குடிமக்கள், அமீரகத்தில் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் கூட இல்லாமலேயே ஐந்து ஆண்டுகளுக்கு அமீரகத்திற்கு சென்று வரலாம்.
5 ஆண்டுகள்
இந்த விசா ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும். அந்த காலகட்டத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டும் என்றாலும் அமீரகம் சென்று வரலாம். அதேநேரம் ஒரு முறை செல்லும்போது அதிகபட்சம் எத்தனை நாட்கள் தங்கலாம் என்பதை அமீரகம் நிர்ணயம் செய்யும். இந்த விசாவின் மிக பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் மற்ற விசாக்களை போல இதற்கு ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.. அரசு நிர்ணயித்துள்ள சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலே போதும் எந்தொரு சிக்கலும் இல்லாமல் அமீரகம் சென்று வரலாம்.
ஆவணங்கள்
இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் போட்டோ, குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல், கடந்த 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை, மருத்துவ காப்பீடு, ரிட்டர்ன் டிக்கெட் ஆகிய ஆவணங்களை சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் கடைசி 6 மாதங்களாக குறைந்தபட்சம் 4,000 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்ச ரூபாய் இருப்பு இருந்திருக்க வேண்டும்.
இந்த விசாவை ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.. GDRFAவின் டிஜிட்டல் சேவைகள் விண்ணப்பிக்கலாம். அல்லது கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டருக்கு ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தலாம்.
விசா கட்டணம்
இந்த விசாவுக்கு AED 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர விசா வழங்கும் கட்டணம் AED 500 வாங்கப்படுகிறது. மேலும், டெபாசிட் AED 3,000 மற்றும் இதர கட்டணங்களாக 100 AED வசூலிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக AED 3,713.50, அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பினும், சில காரணங்களுக்காக கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு முறை இவ்வளவு செலவு செய்தாலும் இது 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்பதால் அடிக்கடி அமீரகம் செல்வோருக்கு இது பலன் தருவதாக இருக்கும்.
48 மணி நேரம்
அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், 48 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும். விசா ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாக இருந்தாலும், ஒரு முறை அமீரகம் செல்லும்போது 90 நாட்கள் மட்டுமே தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 90 நாட்கள் நீட்டிக்கலாம். ஆனால், ஒரு ஆண்டில் மொத்தமாக 180 நாட்களுக்கு மேல் தங்க முடியாது.


Click it and Unblock the Notifications
