விரைவாக 1000 ரன்கள்.. விராட் கோலி சாதனையை முந்திய பாபர் அசாம்.. யார் சிறந்த வீரர்? இதோ புள்ளி விவரம்
துபாய்: பாபர் அசாம் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளார். டி20 உலகக் கோப்பையில் அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. எனவே விராட் கோலியுடன் அவரது ஆட்டம் ஒப்பிட்டு (Virat Kohli Babar Azam comparison) பேசப்படுகிறது.
கேப்டனாக இருந்தாலும் பேட்டிங்கில் தனது கேப்டன்ஷி எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமலும் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பாபர் அசாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அவரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் பலர் ஒப்பிட்டு பேசுகின்றனர். ஆனால் விராட் கோலி சாதனைகளை மெல்ல ஓவர் டேக் செய்ய ஆரம்பித்துள்ளார் பாபர் அசம்.

வேகமாக 1000 ரன்கள்
நேற்றைய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியின்போது, விராட் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார் பாபர் அசாம். டி20யில் அதிவேகமாகக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையை பாபர் பெற்றுள்ளார். மேலும் தனது அரை சதம் உதவியோடு, பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதற்கு பங்காற்றினார் பாபர்.

விராட் கோலி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பிறகு, போது பாபர் அசாம் வெறும் 26 டி20 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி 1000 ரன்களை கேப்டனாக இருந்தபோது அடைய 30 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. கேப்டனாக விராட் இதுவரை டி20 போட்டிகளில், 1559 ரன்கள் எடுத்துள்ளார். பாபர் அசாம் மொத்தம் 1042 ரன்கள் எடுத்துள்ளார்.

கேப்டனாக இருக்கும் போது அதிக ரன்கள்
ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை எடுத்த சாதனைப் பக்கங்களைப் பார்த்தால், டி20யில் கேப்டனாக இருந்தபோது அதிக ரன்கள் குவித்தவர் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச். அவர் இதுவரை 1626 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் விராட் 1559 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 1408 ரன்கள் எடுத்துள்ளார்.

சராசரி ரன் குவிப்பு
விராட் கோலியின் பேட்டிங் சராசரி 48.71 ரன்கள் என்பது சிறப்பு. இதன் பிறகு பாபர் அசாம் கேப்டனாக 45.30 என்ற சராசரியில் ரன்களை குவித்துள்ளார். மற்ற கேப்டன்களின் சராசரி 30க்கும் குறைவாக உள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் பாபரின் ஆதிக்கம்
டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் பாபர் அசாம் 1427 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் விராட் 1114 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த காலகட்டத்தில் பாபர் 41 போட்டிகளில் விளையாடியுள்ளார், அதே நேரத்தில் விராட் 29 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ஆக விராட்டின் சராசரி 61.88. அதேசமயம் பாபரின் சராசரி 43.24 மட்டுமே.

விராட் கோலி எப்போதுமே கிங்
டி20யின் இன்னொரு சாதனையைப் பார்த்தால், விராட் கோலி இங்கும் முன்னிலையில் உள்ளார். டி20 தொடரில் அதிக முறை அதாவது, 7 முறை தொடர் நாயகன் விருதை விராட் கோலி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 5 விருதுகளுடன் பாபர் இரண்டாவது இடத்தில் உள்ளார். அங்கும் அவர் விராட் கோலிக்கு போட்டி கொடுத்து வருகிறார். யார் சிறந்த பேட்ஸ்மேன், விராட் கோலியா, பாபர் அசாமா என்பதற்கு இந்த புள்ளி விவரங்களே பதில் சொல்கின்றன. கடந்த சில மாதங்களாகவே விராட் கோலி ஃபார்மில் இல்லை. அப்படியிருந்தும், ஐபிஎல் போட்டிகளிலும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் அரை சதங்களை பதிவு செய்ய அவர் தவறவில்லை. பார்மில் இல்லாத இந்த நேரத்தில் கூட அப்ரிடியின் பந்தை அவர் சிக்சருக்கு விளாசிய விதம், 2003ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில், சச்சின் டெண்டுல்கர், சோயிப் அக்தர் பந்தை சிக்சருக்கு விளாசியதற்கு சற்றும் குறைவில்லாத ஆக்ரோஷமான ஷாட். ஆனால் பாபர் ஃபார்மில் இல்லாத காலங்களில் எப்படி திணறுவார் என்பது தெரியாது. விராட் கோலி தனது பழைய ஃபார்முக்கு வர அவருக்கு ஃபேவரைட்டான ஐசிசி தொடர் உதவக் கூடும். அப்படி அவர் ஃபார்முக்கு வந்துவிட்டால், நேற்று இல்லை, நாளை இல்லை, எப்போதுமே கிங் என்ற பெயர் அவருக்குத்தான்.












Click it and Unblock the Notifications