ரூ.5.36 லட்சம் கடன் வாங்கி சவுதிக்கு பயணம்.. மரண தண்டனையில் உயிரிழந்த வங்கதேச இளைஞர் யார்? உருக்கம்
துபாய்: சவுதி அரேபியாவில் மெக்கா மசூதி அருகே தகாத செயலில் ஈடுபட்ட புகாரில் வங்கதேசத்தை சேர்ந்த ஒரு ஆண், பெண் என்று 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் மரண தண்டனையில் இறந்த நஸ்ரூல் இஸ்லாம் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்தவர் நஸ்ரூல் இஸ்லாம்மற்றும் ஸ்வீட்டி அக்தர். இவர்கள் 2 பேரும் சவுதி அரேபியாவில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். மெக்கா மசூதி அருகே தகாத செயலில் ஈடுபட்ட புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் தான் கடந்த 14ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை நிறைவற்றப்பட்டது. பொதுவாக வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும்போதும் அதுபற்றி அவர்களின் சொந்த நாட்டின் தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்படும்.
ஆனால் வங்கதேசத்தின் நஸ்ரூல் இஸ்லாம், ஸ்வீட்டி அக்தர் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பற்றி அவர்களின் குடும்பத்தினரும், வங்கதேச தூதரகத்துக்கும் எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. இதுதான் சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையே தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நஸ்ரூல் இஸ்லாம் யார்? அவர் எதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றார்? என்பது பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
நஸ்ரூல் இஸ்லாமின் முழுப்பெயர் நஸ்ரூல் இஸ்லாம் அப்துல் பசீர். இவருக்கு வயது 22. வங்கதேசத்தின் பீராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் அப்துல் பசீர். தாய் பெயர் ரஹிமா. இந்ததம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள். அதில் மூத்த மகன் தான் நஸ்ரூல் இஸ்லாம். இவரது குடும்பம் ஏழ்மையானது.
இதனால் குடும்பத்தை காப்பாற்ற நஸ்ரூல் இஸ்லாம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார்.தூய்மை பணியாளராக பணியாற்ற அவர் 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வங்கதேசத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
இதுபற்றி நஸ்ரூல் இஸ்லாமின் தாய் ரஹிமா கூறுகையில், ''என் மகன் சவுதி அரேபியா சிறையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறையில் இருந்து எங்களிடம் பேசிவான். சிறையில் இருப்பது தெரிந்தாலும் கூட மரண தண்டனை நிறைவேற்றுவது பற்றி எங்களுக்கு தெரியாது. அதுபற்றி யாரும் சொல்லவில்லை.
இப்போது அவன் உயிருடன் இல்லை. நஸ்ரூல் இஸ்லாமிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்்து பாட்டி அபிதா பேகம் மாரடைப்பால் கடந்த 14ம் தேதி இரவில் இறந்தார். அவனது உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவனது மரணம் பற்றி அரசு விசாரித்து நியாயம் பெற்று தர வேண்டும்'' என்றார்.
நஸ்ரூல் இஸ்லாமின் தந்தை அப்துல் பசீர் கூறுகையில், ''என்னுடைய மூத்த மகன் நஸ்ரூல் இஸ்லாம் சிறந்த எதிர்காலத்திற்காக வேலை தேடி சவுதி அரேபியாவிற்கு சென்றான். இதற்காக 7 லட்சம் டாக்காவை (இன்றைய இந்திய மதிப்பு ரூ.5.36 லட்சம்) கடனாக வாங்கியிருந்தார். இந்த தொகையை வைத்து தான் சவுதிக்கு சென்றான். தற்போது மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி அறிந்தவர்கள் உடனடியாக கடனை திரும்ப கேட்கின்றனர். என்னுடைய மகனின் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். மரண தண்டனை பற்றி எங்களிடம் சொல்லாமலேயே நிறைவேற்றிவிட்டனர். இதற்கு நீதி வேண்டும்'' என்று கூறினார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நஸ்ரூல் இஸ்லாம் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் நடந்த 14ம் தேதி மரண தண்டனையில் உயிரிழந்தார்.
நஸ்ரூல் இஸ்லாமிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கடந்த 14ம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த ஸ்வீட்டி அக்தர் என்ற பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்கள் 2 பேரும் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக இருக்கும் மெக்கா மசூதியின் அருகே தகாத செயலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு கடந்த 14ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்கள் 2 பேரும் கணவன் - மனைவி என்று சில ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் அதனை சவுதி அரேபியா அரசு, வங்கதேசம் மற்றும் நஸ்ரூல் இஸ்லாம், ஸ்வீட்டி அக்தர் ஆகியோரின் குடும்பத்தினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
