"விவாகரத்து + குழந்தை இல்லை".. சவுதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற வங்கதேச பெண் யார்? உருக்கம்
துபாய்: சவுதி அரேபியாவில் மெக்கா மசூதியில் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேருக்கு கடந்த 14ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இறந்த பெண் குறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. திருமணமான 2 ஆண்டில் கணவன் விவாகரத்து வழங்கியதால் சகோதரி மகளை எடுத்து வளர்த்ததும், குடும்ப கஷ்டத்திற்காக சவுதி அரேபியாவிற்கு வேலை சென்று மரண தண்டனை பெற்றதும் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்தவர் நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசீர் மற்றும் ஸ்வீட்டி அக்தர். இவர்கள் 2 பேரும் சவுதி அரேபியாவில் வசித்து வந்த நிலையில் கடந்த 14ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரும் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக இருக்கும் மெக்கா மசூதியின் அருகே தகாத செயலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றியதாக சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசீர் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகியோரின் மரண தண்டனை பற்றி சவுதி அரேபியா சார்பில் வங்கதேசத்தின் தூதரகம் மற்றும் அவர்கள் 2 பேரின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மிகவும் ரகசியமாக மரணம தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதோடு, சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது வரை சவுதி அரேபியா உரிய விளக்கத்தை வழங்காமல் உள்ளது. இந்த செயல் வங்கதேசத்தை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.
இவர்கள் 2 பேரையும் கணவன் - மனைவி என்று சில மீடியாக்கள் சொல்லும் நிலையில் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில் மரண தண்டனை நிறைவேற்றி இறந்த வங்கதேச பெண் ஸ்வீட்டி அக்தர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்வீட்டி அக்தர் வீட்டில் மொத்தம் 5 பெண் குழந்தைகள் பிறந்தனர். இதில் கடைசி பெண் தான் ஸ்வீட்டி அக்தர்.
ஸ்வீட்டி அக்தர் வங்கதேசத்தின் டாங்காயில் மாவட்டத்தின் மிர்சாபூர் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 2022ம் ஆண்டு மே மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதம் அவருக்கு சவுதி அரேபியா செல்ல வங்கதேசம் அனுமதி வழங்கியது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
வங்கதேசத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமோ? அவற்றை அந்த பெண் பின்பற்றி உள்ளார். அரசால் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் உரிய அரசு நடைமுறைகளை பின்பற்றி சவுதி அரேபியாவுக்கோ அல்லது பிற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு வங்கதேசத்தின் மனிதவள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணியகம் அடையாள அட்டைகளை வழங்குகிறது. இந்த அட்டையை ஸ்வீட்டி அக்தர் வைத்திருந்தார். இதன்மூலம் அவர் விதிகளுக்கு உட்பட்டு தான் சவுதி அரேபியா சென்றது உறுதியாகி உள்ளது.
இதுபற்றி ஸ்வீட்டி அக்தரின் தந்தை கூறுகையில், ''என் மகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. 2 ஆண்டுகளில் விவாகரத்து நடந்தது. குழந்தை இல்லாததால் சகோதரியின் குழந்தையை வளர்த்து வந்தார்.. அதன்பிறகு 2023ம் ஆண்டில் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றார். முதல் 6 மாதங்கள் பணம் அனுப்பினார். அதன்பிறகு பணம் அனுப்பவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது இறந்துவிட்டார். '' என கதறி அழுதார்.
இதுபற்றி ஸ்வீட்டி அக்தரின் மூத்த சகோதரி கூறுகையில், ''சவுதி அரேபியா சென்ற புதிதில் அடிக்கடி குடும்பத்தினரிடம் பேசினார். முதல் 6 மாதம் எந்த பிரச்சனையும் இல்லை. அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எங்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தபோது அவள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ஸ்வீட்டி அக்தர் சிறையில் இருப்பது எங்களுக்கு தெரியும். ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது எங்களுக்கு தெரியாது. எந்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அதுபற்றி யாரும் சொல்லவில்லை. சிறையில் இருந்தபோது நாடு திரும்பியதும் சொல்வதாக தெரிவித்தாள்.மெக்கா ஷரீஃபில் தூய்மை பணிக்காகச் சென்றதாகவும் சொல்லியிருக்கிறார்.
மரண தண்டனை பற்றி கடந்த 14ம் தேதி தான் அதுபற்றி ஃபேஸ்புக் மூலம் அறிந்து கொண்டோம். என் தங்கையின் தோழி எனக்கு போன் செய்து அக்கா இந்த செய்தியை கேட்டீர்களா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அவர் எனக்கு வீடியோ அனுப்பினார். அதன்பிறகு தான் அந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன்'' என்று கண்கலங்கினார்.
இதுபற்றி ஸ்வீட்டி அக்தரின் சகோதரி மகள் கூறுகையில், ''மரண தண்டனைக்கு நிறைவேற்றிவதற்கு முந்தைய புதன்கிழமை சவுதி அரேபியா சிறையில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் தொலைபேசி இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டதால் தொடர்ந்து பேச முடியவில்லை. பொதுவாக, 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ சிறையிலிருந்து அவர் ஃபோன் செய்து குடும்பத்தினருடன் பேசுவார். கடந்த 14ம் தேதி (புதன்கிழமை) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய நாளிலும் பேசினார். ஆனால் அப்போதும் மரண தண்டனை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருந்தால் அதுபற்றி சொல்லியிருக்க வாய்ப்புள்ளது. இதனால் சந்தேகம் உள்ளது'' என்றார்.




Click it and Unblock the Notifications
