Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்கை வலுவற்ற.. ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலின் சரிவு, த.வெ.க. விஜய்க்கு எச்சரிக்கை மணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உறுதியான கொள்கையில்லாவிட்டால் அரசியலில் நீடித்து நிலைக்க முடியாது என்பதற்கு சமீபத்திய உதாரணம், அரவிந்த் கெஜ்ரிவால். வருங்கால உதாரணமாகப் போவது விஜய். விளக்குகிறது இந்த தலையங்கம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது ஆட்சி காலத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதாக கிளர்த்தெழுந்து போராட்ட களம் வந்த அறிவுஜீவிகள் பலரும், எழுதி தள்ளியவர்கள் பலரும் பிற்காலத்தில் பாஜகவில் இணைந்தனர். அல்லது பாஜக அரசால் அரவணைத்துக்கொள்ளப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட இந்த லிஸ்ட் பெரியது.

Vijay TVK Arvind Kejriwal

கெஜ்ரிவால், பாஜகவிற்கு போகவில்லை. "ஆம் ஆத்மி" என்ற பெயரில், தனித்து கட்சி ஆரம்பித்தார். ஒரே வருடத்தில், 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது ஆம் ஆத்மி. அவரது கொள்கை எவ்வளவு பெரிய ஓட்டை கொண்டது என்பதும் அப்போதுதான் நிரூபணம் ஆனது.

எந்த கட்சியை எதிர்த்து, ஊழலுக்கு எதிராக "சங்கநாதம்" முழங்கினாரோ, அதே காங்கிரஸ் ஆதரவுடன், ஆட்சியை பிடித்து முதல்வர் அரியணையில் ஏறினார் கெஜ்ரிவால். 49 நாட்கள் மட்டுமே நீடித்தது அரசு. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முட்டுக்கட்டைப் போட்டதால் ஆட்சி கலைந்து குடியரசு தலைவர் ஆட்சி வந்தது. 2015ல் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று அசத்தியது ஆம் ஆத்மி. 2020ல், 62 தொகுதிகளை வென்று மீண்டும் அரியணை ஏறினார் கெஜ்ரிவால். ஆனால், கொள்கையற்ற கெஜ்ரிவால் அம்பலப்பட்டார். எந்த பக்கம், எந்த சூழ்நிலையில், மக்கள் ஆதரவு இருக்கிறதோ அங்கெல்லாம் கெஜ்ரிவால் வளைந்து கொடுத்தார்.

நல்லதோ கெட்டதோ, பாஜகவிற்கு ஒரு உறுதியான கொள்கை உள்ளது. இந்துத்துவா! கம்யூனிஸ்டுகளும் அவ்வாறே. பொதுவுடமை! திமுகவுக்கு சமூக நீதி! அதிமுகவும் படிப்படியாக சமூக நீதி கொள்கையை வாரியணைத்தது. கெஜ்ரிவாலுக்கு என்ன கொள்கை உள்ளது?

கெஜ்ரிவால் கொள்கை குழப்பங்கள்

அயோத்தி ராமர் கோவில், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரங்களில், பாஜகவும், ஆம் ஆத்மியும் ஒரே படகில்தான் பயணித்தன. தேர்தல் வரும்போது மட்டும், காங்கிரஸ் அணியில் இருந்தபடி பாஜகவுக்கு எதிராகவே களமாடினார். இன்னொரு பக்கம், பஞ்சாப், கோவா, குஜராத், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களிலும் ஆம் ஆத்மியை விரிவுபடுத்தினார். காங்கிரசை துடைத்துவிட்டு அந்த இடத்தில் ஆம் ஆத்மியை நிலைநிறுத்த முயன்றார்.

ராகுல் காந்தி கோவில் தரிசனங்கள் செய்ததை போலவே கெஜ்ரிவாலும் அனுமார் பக்தியை கையில் எடுத்தார். கெஜ்ரிவால் சிறைக்கு சென்றதை, ராமரின் வனவாசத்தோடு ஒப்பீடு செய்தார், அதிஷி. ஆனால், இந்துத்துவாவாதிகள் பாஜகவுக்கு மாற்றாக எந்த கட்சியையும் நம்பவில்லை என்பதற்கு அடுத்தடுத்த தேர்தல் ரிசல்ட்கள் சாட்சியாகின. வலதும் இன்றி, இடதுமின்றி, தத்தளிக்கிறது ஆம் ஆத்மி. கொள்கையற்ற கட்சி, ஓட்டை விழுந்த ஓடுகளை கொண்ட வீட்டுக்கு சமம். வெயில் காலத்தில் சமாளித்துவிடலாம். அடை மழைகாலத்தில் அனைத்தையும் அடித்துக்கொண்டு போய்விடும் வெள்ளம்.

Vijay TVK Arvind Kejriwal

காணாமல் போன கட்சிகள்

பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு பாதாளத்திற்கு போனது, தேவகவுடாவின் 'மதசார்பற்ற' ஜனதாதளம். கொள்கையை முதன்மையாக வைக்காமல் கூட்டணி மாறியதால் வலு இழந்துள்ளது பாமக. விஜயகாந்த்தின் ஸ்டார் பவர் மங்கியதும், மறைந்துபோய் கொண்டிருக்கிறது தேமுதிக. கொள்கை என்ற அச்சாணி இல்லாவிட்டால் குடை சாய்வதை தவிர வழியில்லை என்பதற்கு கண்முன் உதாரணங்கள் இவை.

த.வெ.க. தலைவர் விஜய்

இப்போது தமிழக வெற்றிக் கழகம் பக்கம், அப்படியே சட்டென திரும்பி பாருங்கள். கெஜ்ரிவாலின் தமிழக அவதாரமாக காட்சியளிக்கிறார் விஜய். இதுவரை, மக்களால் ஏற்கப்பட்ட அனைத்து கொள்கையும் எங்கள் கொள்கைதான் என முழங்குகிறார். "தமிழ் தேசியமும், திராவிடமும் இரண்டு கண்கள் என்ற தமிழக மக்களின் மனநிலையை ஏற்கிறேன்" என்று பேசினார். பெரியார்தான் கொள்கைத் தலைவர் என்கிறார். ஆனால் பெரியாரை பற்றி சீமான், தப்பு தப்பாக பேசியபோது மவுனம் காக்கிறார். பரந்தூர் பரபரப்பாக பேசுபொருளானால் வண்டியை கிளப்பி அங்கு செல்கிறார். தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு பனையூரை விட்டு வெளியே வரமாட்டேன் என்கிறார்.

Vijay TVK Arvind Kejriwal

செழித்து கிடக்கும் நிலத்தில் அறுவடை செய்ய அரிவாளோடு கிளம்பும் ஒருவர், காய்ந்து கிடக்கும் நிலங்களில் கால் பதித்து நீர் பாய்ச்ச தயாராக இல்லை என்பதற்கு ஈடானது விஜய் செயல்பாடு. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அறிக்கைவிடுகிறார், கட்சி பொறுப்புகளில் அதிகப்படியான பெண்களை நியமிக்க மறுக்கிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா என்று நட்சத்திர அந்தஸ்தை வைத்து பிரபலமானாலும், கொள்கை முக்கியம் என உணர்ந்து பாதையை மாற்றியது அதிமுக. "சமூக நீதி காத்த வீராங்கனை" என திராவிடர் கழக கி.வீரமணியாலே வாழ்த்தப்பட்டார் ஜெயலலிதா. ஆனால், கெஜ்ரிவாலின் 'கொள்கையற்றதன்மையே எனது பிரதான கொள்கை' என்ற பாதையில் பயணிக்கிறார் விஜய். "கொள்கையற்ற தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்" என்ற "விடுதலை-2" வசனத்தை உண்மையாக்கினார் கெஜ்ரிவால். அந்த வரிசையில் சேருவதற்கு அடுத்து காத்திருக்கிறாரா விஜய். (எழுதியவர், வீரக்குமாரன், ஆசிரியர், ஒன்இந்தியாதமிழ்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+