கொலையில் முடிந்த குழாயடி தகராறு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு: ஈரோட்டில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகாறில் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆரண்புதூர் அருகே உள்ள மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் சித்துராஜ் (33). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள பொதுக்குழாயில் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலை முடித்துவிட்டு வந்த சித்துராஜ், அந்தக் குழாயில் வைக்கப்பட்டிருந்த குடத்தை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு கை, கால்களை கழுவினார்.

தனது குடத்தை எடுத்து வைத்ததால் ஆத்திரமடைந்த பானுமதி (47), சித்துராஜை திட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பானுமதியின் மருமகன் ரங்கநாதன், சித்துராஜை பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படவே, தான் வைத்திருந்த கத்தியை எடுத்த சித்துராஜ், ரங்கநாதனை குத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரங்கநாதனின் மாமியார் பானுமதி, மனைவி சிவரஞ்சனி, சகோதரி சித்ரா உள்ளிட்டோர் சித்துராஜை தாக்கியதுடன் அவரிடம் இருந்த கத்தியை பறித்து அவரை குத்தியுள்ளனர். இதில் சித்துராஜ் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். இதனால் பயந்து போன பானுமதி குடும்பத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சித்துராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சித்துராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து பானுமதி, சிவரஞ்சனி, ரங்கநாதன், சித்ரா, சகுந்தலா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், சித்துராஜை கொலை செய்ததற்காக குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக 3 மாதம் குற்றவாளிகள் சிறையில் இருக்க நேரிடும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications