வெளியேறிய அரசியல் பிரமுகர்கள்: வண்டியை விருத்தாசலத்துக்கு விட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு! என்னவாம்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் விருத்தாசலம் சென்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரம் நேற்று மாலையோடு ஓய்ந்த நிலையில், அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் ஈரோட்டில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று விருத்தாசலம் சென்றுள்ளார்.
விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக விருத்தகிரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டுள்ளாராம் தென்னரசு.

நாளை வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

வெளியேறிய வெளியூர் நிர்வாகிகள்
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தங்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். தொகுதிக்கு அப்பாற்பட்டவர்கள் ஆறு மணிக்குள் வெளியேற ஏற்கனவே உத்தரவிடப்பட்ட நிலையில், பிரச்சாரத்திற்காக வந்திருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கும் விடுதிகளை காலி செய்து வெளியேறினர். பெரும்பாலானவர்கள் மாலை 5 மணி முதல் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய நிலையில், எஞ்சியவர்களும் அவசர அவசரமாக இரவோடு இரவாக புறப்பட்டுச் சென்றனர்.

அதிமுக வேட்பாளர் வழிபாடு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை முடித்த நிலையில், இன்று காலை விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான விருதகிரீஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். நாளை நடைபெறும் தேர்தலில், தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவர் கோவிலில் வழிபட்டதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

ஈபிஎஸ் உற்சாகம்
கடந்த 23ஆம் தேதி மதுரை டி.குன்னத்தூரில் உள்ள ஆர்.பி உதயகுமார் கட்டிய அம்மா கோவிலில் நடைபெற்ற 51 ஜோடிகளின் திருமண நிகழ்வில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, அம்மா கோவிலில் வழிபட்ட சில நிமிடங்களிலேயே உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என்று உற்சாகமாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications