பறந்து வந்த கற்கள்.. போர்க்களமான ஈரோடு கிழக்கு தொகுதி.. பரப்புரையை விட்டு மருத்துவமனை ஓடிய சீமான்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கல்வீச்சு சம்பவம் நடந்ததால் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இன்று வீரப்பன்சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் திமுகவினர், நாம் தமிழர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கற்கள், கம்புகள் வீசப்பட்ட நிலையில் சீமான் பரப்புரையை பாதியில் முடித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த மாதம் திடீரென காலமானார். இதையடுத்து வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

சீமான் பிரசாரம்
இதுதவிர நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அருந்ததியர் பற்றி சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சீமான் புதன்கிழமை இரவு ஈரோட்டில் மீண்டும் பிரசாரம் மேற்கொண்டார்.

திமுக-நாம் தமிழர் மோதல்
அதன்படி சீமான் உள்ளிட்ட கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரம் செய்தனர். அங்கு திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் சீமான் பரப்புரை செய்ய தயாரானார். இந்த வேளையில் திடீரென்று நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் என்பது கடுமையாக நடந்தது.

பறந்து வந்த கற்கள்
இருகட்சியினரும் கற்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்ட கம்புகளை எடுத்து மாற்றி மாற்றி ஆக்ரோஷமாக வீசினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினரின் மண்டைகள் உடைந்தன. நாம் தமிழர் கட்சியில் 7 பேர் காயமடைந்த நிலையில் திமுகவில் ஒருவர் காயமடைந்துள்ளதா கூறப்படுகிறது. அதோடு போலீசாரும் காயமடநை்தனர்.

மருத்துவமனை சென்ற சீமான்
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சீமான் தனது பரப்புரையை பாதியில் கைவிட்டு காயமடைந்த கட்சியினர் மற்றும் போலீசாரை சந்தித்து நலம் விசாரித்து ஆதரவு கொடுத்தார். மேலும் தொடர்ந்து வீரப்பன்சத்திரம் பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications