திமுகவின் தொடர் வெற்றி.. அண்ணா அறிவாலயத்தை அதிர வைத்த உடன்பிறப்புகள்.. உற்சாகமான மு.க.ஸ்டாலின்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பின், அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. திமுக வெற்றி உறுதியான போதே அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அதேபோல் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் திமுகவினர் தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மீண்டும் திமுக வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட விசி சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். 2வது இடத்தில் நாதக சார்பாக போட்டியிட்ட சீதாலட்சுமி 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

கடந்த சில வாரங்களாகவே பெரியார் குறித்து கடுமையாக நாதக ஒருங்கிணைப்பாளர் விமர்சித்து வந்தார். தற்போது பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டிலேயே நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்திருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிவான வாக்குகளில் சுமார் 75 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை சந்திரகுமார் பெற்றிருக்கிறார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி மு.க.ஸ்டாலின் தலைமையில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் திமுக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வெற்றிக்கு பின் சந்திரகுமார் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரம் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின் ஈரோட்டிலும், சென்னை அண்ணா அறிவாலயத்திலும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் இனிப்புகளை வழங்கி திமுக கொண்டாட, இன்னொரு பக்கம் பட்டாசுகளை வெடித்து மேளம் அடித்து டான்ஸ் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைத்தேர்தல் வெற்றி உறுதியான போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வந்துவிட்டார். அவருக்கு அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வாழ்த்துகளை கூறி கோஷம் எழுப்பினர். அதேபோல் ஈரோட்டிலும் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின் திமுகவினர் டான்ஸ் ஆடி திமுக கொடியுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications