ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? செங்கோட்டையன் சொன்ன பதில்!
ஈரோடு: சென்னையில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். ஜெயலலிதா நினைவு நாளில் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடப்பதால் சென்னை செல்லவில்லை என்று கூறிய அவர், ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுசேர முடியாது என்ற எடப்பாடி பழனிசாமியின் கடிதம் குறித்து கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.
சமீப நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு வந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்கவில்லை. அதேபோல் அதிமுகவின் கேபி முனுசாமியும், செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாட்டை உறுதி செய்தார். இருந்தாலும், செங்கோட்டையன் அதிமுகவுக்கு விஸ்வாசமானவர் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. சென்னையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஈரோட்டில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த ஜெ. பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது செங்கோட்டையனிடம், சென்னையில் நடக்கும் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் தரப்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளாக இருந்திருந்திருந்தால் நான் சென்னை சென்றிருப்பேன். பிறந்தநாள் என்பதால், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
ஜெயலலிதா பிறந்தநாளன்று செய்யப்படும் நலத்திட்ட உதவிகளாக் மக்கள் பயன் பெறுகிறார்கள். இதன் மூலமாக 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுசேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட கடிதம் தொடர்பான கேள்விக்கு, இந்த விஷயம் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications