செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்தாலும்.. அவர் உருவாக்கிய படை களமிறங்கிடுச்சு.. உறுதி செய்த ஸ்டாலின்!
ஈரோடு: செந்தில் பாலாஜியை சதியால் சிறையில் வைத்திருந்தாலும், அவரால் உருவாக்கப்பட்ட செயல் வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (மார்ச் 31) ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை அறிமுகப்படுத்தி, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

செந்தில் பாலாஜிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்: அப்போது, தனது பேச்சின் தொடக்கத்திலேயே, மேடையில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் பெயர்களை குறிப்பிட்டு வரவேற்ற ஸ்டாலின், இந்தக் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியோடும் - சிறப்போடும் ஏற்பாடு செய்துள்ள ஆற்றல்மிகு ஈரோட்டுச் செயல்வீரர் முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், முக்கியமாக இங்கு வரவில்லை என்றாலும், தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களைப் பெற்றிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், என்னுடைய நன்றியும்! வாழ்த்துகளும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "கடந்த 5 ஆண்டுகளில், ED,IT,CBI இப்படிப்பட்ட மத்திய அரசின் அமைப்புகளை பாஜகவின் கைப்பாவையாக மாற்றி, அவர்களை ரெய்டுக்கு அனுப்புவது, பிறகு பாஜகவுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை. இந்த ஊழல் வெளி வந்ததால், பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள்.
செயல்வீரர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்துள்ளனர்: இங்கு தமிழகத்திலும் மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பாஜகவின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் போன்று மாற்றி எதிர்க்கட்சிகள் மேல் ஏவி விட்டிருக்கும் பாஜகவுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இது இரண்டு பக்கமும் கூரான முனைகளைக் கொண்ட கத்தி என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருவது மட்டுமல்ல, தேர்தல் பணிகளையும் கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் மீதான அடக்குமுறை இண்டியா கூட்டணியின் வலிமையை அதிகரித்திருக்கிறது. செல்வாக்கை அதிகரித்திருக்கிறது." எனக் கூறியுள்ளார் ஸ்டாலின்.
களத்தில் செந்தில் பாலாஜி டீம்: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கோவையை திமுகவின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜியை களமிறக்கி இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். செந்தில் பாலாஜியும் அதற்கான பணிகளை செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அபார வெற்றியை தேடித் தந்தார். அதிமுகவின் கோட்டை ஆக இருந்த கோவை மாவட்டம் செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர் திமுகவின் கோட்டையாக மாறி வந்தது.
இந்நிலையில் தான், சட்டவிரோத பண பறிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சிறை சென்றார். கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பதால் அவர் சிறையில் இருந்தாலும் பிரச்சாரக் களத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கோவையில் இந்த முறை அண்ணாமலையை தோற்கடிக்க செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம்.
செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்: அண்ணாமலை கரூரை விட்டு கோவைக்கு தாவி இருந்தாலும், அங்கு அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என சூளுரைத்து கிளம்பியுள்ளனர் கரூர் மாவட்ட செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள். செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்களான கரூர் டீம் மீண்டும் கோவையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுக்கூட்டத்திலேயே பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications