ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம்..தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதேபோல் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே கைகளில் கொண்டு செல்ல அனுமதி என்றும், அதற்கு மேல் எடுத்து செல்ல ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். அதேபோல் இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப். 7 என்றும், வேட்புமனு பரிசீலனை பிப்.8ம் தேதி நடைபெறும் என்றும், பிப்.10ம் தேதி வேட்புமனுவை திரும்பபெற கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்.27ம் தேதி பதிவாகும் வாக்குகள், மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறி இருக்கிறார்.

விவிபேட் இயந்திரம்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து சத்யபிரதா சாகு கூறுகையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முழு அளவில் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் கவனத்திற்கு
அதேபோல் வருமான வரி அதிகாரிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும். ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ளவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்களின் பெயர் பட்டியலிடப்படும். வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பட்டியல், தனியாக வாக்காளர் துணைப்பட்டியலாக வெளியிடப்படும். துணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்களும் இடைத்தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.

ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம்
தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ. 40 லட்சம் வரை செலவழிக்கலாம். ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அங்கு ரொக்கமாக அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே கையில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் எடுத்துச் சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications