39 ஆண்டுகளுக்கு பிறகு எம்எல்ஏவாக தேர்வான ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஈரோடு கிழக்கு வரலாற்று சாதனை
ஈரோடு கிழக்கில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதனை படைத்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் 39 ஆண்டுகள் கழித்து அவர் எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது. இதில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தது. . முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளையும் அதிமுக 43981 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 10804 வாக்குகளையும் தேமுதிக 1177 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றதாக அறிவிக்கப்பட்டார். மொத்தம் வாக்கு வித்தியாசம் 66,575 ஆகும்.

அதிமுக
அதாவது அதிமுகவுக்கும் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 66,575 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரைவிட ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்டது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகளை வைத்து பார்த்தால் இந்த தேர்தல் மட்டும் இல்லாமல் கடந்த 2011 முதல், வென்ற கட்சிக்கும் (winner) தோற்ற கட்சிக்கும் (runner) இடையே இருந்த வாக்கு வித்தியாசத்தை விட ஈவிகேஎஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். மேற்கண்ட தேர்தலில் 7,000 அல்லது 8 ஆயிரம் இப்படித்தான் இருந்தது. ஆனால் முதல்முறையாக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு முதல் தேர்தல் 2011 ஆம் ஆண்டு நடந்தது. இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிட்டார். அவர் 69, 166 வாக்குகளை பெற்றார். அடுத்த இடம் திமுகவுக்கு கிடைத்தது. இதில் எஸ் முத்துசாமி 58,522 வாக்குகளை பெற்றுள்ளார். இவர்களுக்கிடையே வாக்கு வித்தியாசம் 10,644 ஆகும்.

முந்தைய தேர்தல்
அது போல் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 64, 879 வாக்குகளை பெற்றார். தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு தாவிய வி.சி. சந்திரகுமார் 57,085 வாக்குகளை பெற்றார். இவர்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 7,794 ஆகும். அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜா 58,396 வாக்குகளை பெற்றார். இவர்களுக்கிடையே வாக்கு சதவீதம் 8,904 ஆகும்.

மகனை முந்திய தந்தை
ஆனால் தற்போது திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கையில் திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் வாக்கு எண்ணிக்கையே முடியாத பட்சத்தில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மூன்று வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
1. ஈரோடு கிழக்கு வரலாற்றில் இதுவரை இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் யாரும் வென்றதில்லை.
2. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருமகன் ஈவெரா பெற்ற வாக்குகளை விட ஈவிகேஎஸ் இளங்கோவன் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளார்.
3. ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்கு வித்தியாசத்தை காட்டிலும் அதிமுக வேட்பாளரின் வாக்குகள் குறைவாக உள்ளன. கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜ் பெற்ற வாக்குகளை விட 15 ஆயிரம் கூடுதலாக பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
பதிவான 1,74 192 வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் 1,10,556 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் அவர் 39 ஆண்டுகளுக்கு பிறகு எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்திற்கு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் எம்பியாக இருந்தார்.












Click it and Unblock the Notifications