புது கொரோனா நோயாளிகள் இல்லை.. ஒரே நாளில் 13 பேர் டிஸ்சார்ஜ்.. ஈரோடு காட்டும் பாதை.. எப்படி?
ஈரோடு: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈரோடு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற தொடங்கி உள்ளது. இன்னும் முழுமையான வெற்றியை அம்மாவட்டம் பெறவில்லை என்றாலும் கூட வேகமாக அங்கு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video
தமிழகத்தின் கொரோனா எபிசென்டராக மாறும் வாய்ப்புள்ளது என்று 10 நாட்களுக்கு முன் கருதப்பட்ட மாவட்டம்தான் ஈரோடு. அந்த அளவிற்கு திடீர் என்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்தது.
டெல்லி மாநாடு மூலம் உருவான நோயாளிகள் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் மூலம் நோய் தோற்று ஏற்பட்டவர்கள் என்று ஈரோட்டில் இரண்டு வகைகளில் கொரோனா பரவியது. இப்படி இரண்டு வகையிலும் கொரோனா பரவியதால் ஈரோட்டில் வேகமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் ஆனது.

தொடக்கம்
ஈரோட்டில் முதல் கேஸ் கடந்த மாதம் 21ம் தேதிதான் பதிவானது. தமிழகத்தில் அதுதான் ஐந்தாவது கொரோனா கேஸ். அவர் 75 வயது நபர், ஐஆர்டி மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் டெல்லியில் இருந்து ஈரோடு வந்துள்ளார். இவருக்கு கொரோனா ஏற்பட்டது. பின் அதே நாளில் ஈரோடு வந்த தாய்லாந்து பயணி ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டது. இப்படித்தான் ஈரோட்டில் கொரோனா தொடங்கியது.

வரிசையாக வேகம் எடுத்தது
அதன்பின் வரிசையாக ஈரோட்டில் கொரோனா வேகம் எடுத்தது. தமிழகத்தில் பதிவான 26வது கேஸ், கேஸ் எண் 47, 48, 49, 50 ஆகிய நபர்களுக்கு ஈரோட்டில் இருந்துதான் கொரோனா ஏற்பட்டது. அதேபோல் கேஸ் எண் 56 முதல் 65வது வரை 10 பேருக்கு ஈரோட்டில்தான் கொரோனா ஏற்பட்டது. முக்கியமாக டெல்லி மாநாடு சென்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த பிஸ்னஸ்மேன் ஒருவர் மூலம்தான் ஈரோட்டில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

திடீர் என்று அதிகரித்தது
அதன்பின் 3ம் தேதியில் இருந்து ஈரோட்டில் யாருக்கும் கொரோனா ஏற்படாமல் இருந்தது. வரிசையாக 5 நாட்கள் ஈரோட்டில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. ஆனால் மக்கள் அங்கு ஆசுவாசம் அடையும் முன் 9ம் தேதி ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வந்தது. அதன்பின் ஒன்றுவிட்டு ஒருநாள் 2-3 என்ற எண்ணிக்கையில் கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் ஈரோட்டில் மொத்தம் 64 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

எங்கே சிகிச்சை பெற்றனர்
இவர்கள் எல்லோரும் ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில்தான் ஈரோட்டில் கடந்த மூன்று நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா ஏற்படவில்லை. இதில் வீட்டில் வைத்து 6000 பேர் வரை கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் யாருக்கும் தீவிர அறிகுறி இல்லை. இதனால் ஈரோட்டில் அடுத்த சில நாட்களுக்கு கொரோனா வர வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

குணம் அடைந்தனர்
இந்த நிலையில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அங்கு இன்று 13 பேர் குணப்படுத்தப்பட்டனர் . ஆம் ஒரே நாளில் ஈரோட்டில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேபோல் ஈரோடு நோயாளிகள் 4 பேர் கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஏற்கனவே ஒரு நோயாளி பலியான நிலையில் இன்று ஈரோடு நோயாளி ஒருவர் திருச்சி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொஞ்சம்தான்
இதன் மூலம் ஈரோட்டில் மொத்தம் 19 பேர் டிஸ்சார்ஜ் போக தற்போது ஈரோட்டில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 45 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இத்தனை பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது இதுதான் முதல்முறை ஆகும். இவர்கள் எல்லோருக்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பழங்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தார். இவர்கள் வீட்டில் வைத்து 14 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

ஈரோடு வழி காட்டும் வெளிச்சம்
இதன் மூலம் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈரோடு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு எதிராக ஈரோட்டில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மக்கள் வீட்டிற்குள் இருக்கிறார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. அதேபோல் 6000 அறிகுறி உள்ள நபர்கள் எல்லோரும் வீட்டிற்குள் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் வெளியே செல்லாமல் தினமும் கண்காணிக்கப்படுகிறார்கள்.

விரைவான சோதனை
அதேபோல் நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்களின் காண்டாக்ட் எல்லாம் டிரேஸ் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அறிகுறி - சோதனை - தனிமைப்படுத்துதல் என்று உலக சுகாதார மையத்தின் 3 விதிகளை மிக சிறப்பாக பின்பற்றி ஈரோடு கொரோனாவை வெல்ல தொடங்கி உள்ளது. இன்னும் முழுமையான வெற்றியை அம்மாவட்டம் பெறவில்லை என்றாலும் கூட வேகமாக அங்கு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications