விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்
சென்னை: விஜய் ஆதரவுடன் முதல்வர் ஆகி ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் பழனிசாமியின் இந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் என்றும் தெரிவித்தார். எனக்கு பிறகு கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்து விட்டு உழைத்தவர்களையே பழனிசாமி நீக்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நெல்லை, தூத்துக்குடிக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில் இன்று கடலூர் செல்ல இருந்தார். ஆனால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. நாளை காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

விஜய் ஆதரவுடன் முதல்வர் ஆக நினைத்தார்
இதேபோல் தவெக தலைவர்கள் பலரும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் செங்கோட்டையன் ஈரோட்டில் வாக்கு கேட்டு இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் விஜய் ஆதரவுடன் முதல்வர் ஆகி ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக கூறினார். மேலும் பழனிசாமியின் இந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவருக்கு கோபம் என்றும் தெரிவித்தார்.
செங்கோட்டையன் பேசியதாவது:- கோபிசெட்டிபாளையத்தில் வேட்புமனு முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது. 10 முறை ஏற்கனவே போட்டியிட்டு இருக்கிறேன். எனக்கு வேட்புமனு எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாதா? ஒரு சிறு பிழை வருமா? ஆனால் வேண்டும் என்றே செய்கிறார்கள். வேண்டும் என்றே ஒரு பெட்டிசன் போட்டங்கா..
என் மீது அவருக்கு கடும் கோபம்
ஆனால் அங்கே இருந்த ஐஏஎஸ் அதிகாரி இந்த பெட்டிசன் எல்லாத்தையும் கோர்ட்டில் போய் கொடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர். தெளிவா அவர் கொடுத்து இருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லிவிட்டார்.
ஏன் இப்படி செய்கிறார் என்றால், விஜய் ஆதரவுடன் முதல்வர் ஆகி ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். பழனிசாமியின் இந்த முயற்சியை நான் தான் முறியடித்தேன்.. இதனால் அவர் என் மீது கொலை வெறியில் இருக்கிறார்.. என் மீது அவருக்கு கடும் கோபம்.. மனு தாக்கல் செய்ததையே செல்லாது என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றால் என் மீது அவர்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும் என நினைத்து பாருங்கள்..
நான் விட்டு கொடுத்ததால் தான்
10 முறை தோல்வியை கண்ட பழனிசாமி சொல்வார் என்னை பார்த்து துரோகி என்று.. நான் முதல்வராக ஆகி உங்களை கட்சியில் விட்டு தூக்கியிருந்தால் நான் துரோகி.. ஆனால் நான் பொதுச்செயலாளராக உங்களை விட்டு கொடுத்ததால் தான் எனக்கு பெயர் துரோகி.. நான் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்னதால் தான் எனக்கு அவர் வைத்த பெயர் துரோகி. நான் டெப்பாசிட் வாங்க மாட்டேன் என சொல்கிறார்.
ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், விசில் சின்னத்துக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் என்று. எனக்கு பிறகு கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்து விட்டு உழைத்தவர்களையே பழனிசாமி நீக்கிவிட்டார். எடப்பாடி பழனிசாமி என்ன நன்மையை செய்யப் போகிறார் என்பது தான் கேள்வி.. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.












Click it and Unblock the Notifications