2 பக்கமும் கூரான கத்தி.. பெரிய ரிஸ்க்.. எடப்பாடிக்குதான் தோல்வியாமே? என்ன "இவர்" இப்படி சொல்றாரே?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி கோதாவில் இறங்கிவிட்டார், அவர் என்ன நடந்துவிடும் என்று பார்த்து விடலாம் என்று ரிஸ்க் எடுக்கிறார், அவருக்கு எதிராக இது திரும்பும் வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். இன்னொரு பக்கம் இங்கே பாஜக போட்டியிடுவதற்கான அறிகுறிகளும் வர தொடங்கி உள்ளன.
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். இது அதிமுகவில் பெரிய மோதலை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு
அதிமுகவில் நடக்கும் இந்த சம்பவங்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் இவ்வளவு சுவாரசியம் ஆகும் என்பதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். திமுக கூட்டணியில் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை என்பது வேறு. அதிமுகவில் நடக்கும் பிரச்சனை என்பது வேறு. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது விரைவில் தெளிவாகிவிடும். அது சிக்கல் இல்லை. ஆனால் அதிமுகவில் நடக்கும் பிரச்சனைதான் பெரிதாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் காரணமாக எடப்பாடி - ஓபிஎஸ் இடையிலான மோதல் உச்சம் தொட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டு இருந்தால் இந்த பிரச்சனையே இருந்திருக்காது.

எடப்பாடி கோதா
எடப்பாடி கோதாவில் இறங்கிவிட்டார். அவர் என்ன நடந்துவிடும் என்று பார்த்து விடலாம் என்று ரிஸ்க் எடுக்கிறார். இது இரண்டு பக்கமும் கூரான கத்தி. என்ன நடந்துவிடும் என்று பார்க்கலாம்.. என்று தைரியமாக இறங்கி இருக்கிறார். ஆனால் அவர் எடுத்து இருப்பது ரிஸ்க். இது இரண்டு பக்கமும் கூரான கத்தி. இதை தேவையின்றி எடப்பாடி கையில் எடுத்துள்ளார். அவர் இதில் தோற்று போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. அனுதாப வாக்குகளும் விழும் வாய்ப்புகளும் உள்ளன.

கத்தி
இன்னொரு பக்கம் ஆளும் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இதனால் எடப்பாடி தரப்பு இதில் தோற்கவே வாய்ப்பு இருக்கு. இருந்தாலும் இதில் போட்டியிடலாம் என்று நினைத்துதான் எடப்பாடி இறங்கி உள்ளார். காரணம் இந்த தேர்தலிலேயே இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைக்குமா என்று பார்க்கிறார். இப்போதே அதில் ஒரு முடிவு தெரிந்துவிட்டால் அது தனக்கு வெற்றி என்று அவர் நினைக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வர வேண்டும். தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். இந்த தேர்தலிலேயே தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எடப்பாடி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

சின்னம் முடங்கும்
இப்போதே இரட்டை இலையை வாங்க எடப்பாடி நினைக்கிறார். அப்படியே சின்னம் முடங்கினாலும் ஓபிஎஸ் மூலம் தான் சின்னம் முடங்கியது என்று எடப்பாடி வாதம் வைப்பார். ஒற்றுமைக்கு ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி மூலம்தான் சின்னம் முடங்கியது என்று ஓபிஎஸ் வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடி போட்டியிட முடிவு செய்த போது ஓபிஎஸ் அதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார். எடப்பாடி இதை எல்லாமே தெரிந்தேதான் ரிஸ்க் எடுக்கிறார். நாங்கள்தான் முக்கியமான கட்சி, நாங்கள்தான் எதிர்க்கட்சி, பாருங்க சின்னத்தை பற்றி கூட கவலைப்படாமல் திமுகவை எதிர்க்கிறோம் என்று எடப்பாடி வாதம் வைக்க சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

அதிமுக உடையும்
இன்னொரு பக்கம் அதிமுகவை உடைத்துவிட்டார். அதனால்தான் சின்னம் முடங்கியது என்று ஓபிஎஸ் வாதம் வைப்பார். இதற்குள் புகுந்து பாஜக என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டால் கூட எடப்பாடி தரப்பை விட குறைவான வாக்குகளைத்தான் வாங்க முடியும். அதனால்தான் பாஜக நின்றால் அவர்களை ஆதரிப்பேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். எடப்பாடிக்கு இதன் மூலம் ஓபிஎஸ் லாக் வைத்துள்ளார். பாஜக நின்றுவிட்டால் ஓபிஎஸ் சப்போர்ட் செய்வார். அப்போது எடப்பாடிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.

சிக்கல்
எடப்பாடிக்கு கூட பிரச்சனை இல்லை. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் பாஜகவை எதிர்க்க துணிய மாட்டார்கள். இதை தெரிந்து கொண்டுதான் பாஜக நின்றால் அவர்களை ஆதரிப்பேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். எடப்பாடிக்கு இதன் மூலம் ஓபிஎஸ் லாக் வைத்துள்ளார். தனித்து நிற்கட்டுமா, பாஜகவை ஆதரிக்க வேண்டுமா என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். எடப்பாடி பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஓபிஎஸ் ஏற்படுத்தி உள்ளார். அப்படி செய்யாத பட்சத்தில் எடப்பாடி தனித்துவிடப்பட்ட வாய்ப்புகள் உள்ளன, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications