ரொம்ப “ரிஸ்க்”.. ஈரோடு கிழக்கில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! குவிக்கப்படும் துணை ராணுவப்படை
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகின்றனர்.
ஈரோடு: இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளவற்றில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகின்றனர். வாக்குப் பதிவு நடைபெறுவதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள்
அதேபோல் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 77 பேர் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நேற்று முந்தினம் மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததை தொடர்ந்து தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேறினர்.

15 போலீஸ் குழுக்கள்
தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேறினார்களா என்பதை கண்காணிக்க காவல்துறை 15 குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்திலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனைச்சாவடி
வெளியூர்களை சேர்ந்த யாராவது ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வருகிறார்களா என்பதை கண்காணிக்க 12 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களை விசாரணை செய்து அனுமதித்தனர் காவல்துறையினர்.

32 பதற்றமான வாக்குச்சாவடிகள்
இந்த இடைத்தேர்தல் பணியில் 1,206 அலுவலகர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்.

81 வகையான கருவிகள்
அதேபோல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 796 புகார்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 81 வகையான பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications