எடப்பாடி ஆதரவாளரை பதவியில் நியமித்த ஓபிஎஸ்! அலறி அடித்து ஓடிய நிர்வாகி! ஐயோ.. என்னை கேட்கவே இல்லங்க!
ஈரோடு : எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவரை, ஓபிஎஸ் அணியில் நிர்வாகியாக அறிவித்ததால், அதிர்ந்துபோன அவர், ஓபிஎஸ் பற்றி புகார் கூறியுள்ளார். இது ஈரோடு மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைக் கேட்காமலேயே ஓபிஎஸ் அணி, தன்னை பொறுப்பில் நியமித்துள்ளதாக ஈரோட்டைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற நிலையில், உடனே ஈபிஎஸ் அணி மாவட்ட செயலாளரை சந்தித்து விளக்கம் அளித்த அவர், இதுபற்றி விளக்கம் கேட்டு ஓபிஎஸ்ஸுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள்
அதிமுகவி்ல் ஒற்றைத் தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர செல்வம் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உயர்நீதிமன்றத்தை தாண்டி தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஓபிஎஸ் அணி நியமனம்
அதிமுகவில் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வரும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மாறி மாறி தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று அணியில் இருந்து வருபவர்களுக்கு ஓபிஎஸ் அணியில் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட வாரியாக, மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து மட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட நிர்வாகிகள்
இந்த நிலையில் தான் அதிமுக ஓபிஎஸ் அணியில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக உள்ள ஜெயராமன், வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த எடப்பாடி அணியினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஈபிஎஸ் ஆதரவாளருக்கு ஓபிஎஸ் அணியில் பதவி
எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் ஜெயராமனுக்கு, ஓபிஎஸ் அணியில் பதவி வழங்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயராமன், தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.தன்னைக் கேட்காமலேயே ஓபிஎஸ் அணியில் தன்னை நிர்வாகியாக அறிவித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிர்ச்சி
இந்நிலையில், நேற்று ஈரோடு அதிமுக அலுவலகத்திற்கு வந்த ஜெயராமன், தான் இன்னும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தான் இருப்பதாகவும், தன்னை கேட்காமலேயே ஓபிஎஸ் அவரது அணியில் நிர்வாகியாக அறிவித்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

ஓபிஎஸ்ஸுக்கு கடிதம்
இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் அனுப்ப இருப்பதாகவும் ஜெயராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கத்தைச் சந்தித்து, தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவே தொடர்வதாகவும் தெரிவித்தார்.

நடந்துடுச்சே
ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், மாற்றி மாற்றி மாற்று அணியின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து போட்டி போட்டு பதவி கொடுத்து வரும் நிலையில், இப்படி எதிர் தரப்பினருக்கும் பதவி கொடுக்கப் போகிறார்கள் என விமர்சிக்கப்பட்டு வந்தது. இப்போது அதுவும் நடந்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications