"விரக்தி.." வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய தென்னரசு! அதிமுக தொண்டர்கள் யாருமே இல்லை
அதிமுக வேட்பாளர் தென்னரசு அதிருப்தியில் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியே மிக பெரிய முன்னிலை பெற்றுள்ளது. இந்தச் சூழலில் அதிருப்தியடைந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு அதிருப்தியில் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணி, அதிமுக, நாம் தமிழர் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
கடந்த வாரம் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் கூட திமுக கூட்டணி, அதிமுக இடையே தான் கடும் போட்டி இருந்தது.

ஈரோடு கிழக்கு
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தங்கள் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே, திமுக மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் இறங்கினர். அதேபோல காங்கிரஸ் சார்பிலும் தனியாகக் குழு அமைக்கப்பட்டு தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், பிரச்சாரத்தை இன்னும் தீவிரமாகச் செய்தது திமுக கூட்டணி. பல மூத்த அமைச்சர்களும் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்தனர். பிரசாரத்திற்குக் கடைசி நாளன்று முதல்வர் ஸ்டாலினே நேரடியாகப் பிரசாரம் செய்தார்.

அதிமுக
அதேபோல அதிமுக சார்பிலும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். அங்கு முதலில் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பின்னர், எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்பாளராகக் களமிறங்கினார். ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். டிடிவி தினகரனின் அமமுகவும் குக்கர் சின்னம் உறுதியாகக் கிடைக்காது என்பதால் வாபஸ் பெற்றார்.

இரட்டை இலை
இதன் மூலம் திமுக கூட்டணி மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் அதிமுகவுக்குப் பல தேர்தலுக்குப் பிறகு இரட்டை இலை வாக்குகளை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் தரப்பு களத்தில் இருந்து ஒதுங்கிய நிலையில், அதிமுக வாக்கு வங்கி பழையபடி செல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேலும், நாம் தமிழரைத் தவிர மற்ற முக்கிய கட்சிகள் யாருமே களமிறங்கவில்லை. இதன் மூலம் ஆளும் தரப்பிற்கு எதிரான வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு வரும் என்று அக்கட்சியினர் நம்பினர்.

படுதோல்வி
ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படியே நேர்மாறாக உள்ளது. தேர்தலில் ஆளும் தரப்பு வெல்லும் என்றும் இவ்வளவு பெரிய வெற்றி அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும். இப்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிகப் பெரிய முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 10,000 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், அவரை காட்டிலும் 12 ஆயிரம் வாக்குகள் அதிகமாக அதாவது சுமார் 32 ஆயிரம் வாக்குகள் பெற்று இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்,

அதிமுக தொண்டர்கள் இல்லை
அடுத்தடுத்து சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1.5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஸ்டாலின் அரசுக்கு மக்கள் தரும் ஆதரவே இந்த தேர்தல் முடிவுகள் என்று திமுகவினர் குறிப்பிடுகின்றனர். இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இருப்பினும், அதிமுக தொண்டர்கள் அதற்கு நேர்மாறாக விரக்தியில் உள்ளனர். இதனால் தான் வாக்கு எண்ணும் மையத்தில் கூட அதிமுக தொண்டர்கள் யாருமே பெரிதாக வரவில்லை..

விரக்தியில் வெளியேறிய தென்னரசு
இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு அதிருப்தியில் அங்கிருந்து வெளியேறினார். இப்போது 4ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தென்னரசு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். அதிமுக சார்பில் தென்னரசு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியேறும் போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது என்று செய்தியாளர்களிடம் காட்டமாகச் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினார்.












Click it and Unblock the Notifications