"துரோகத்தின் வலி".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு புதிய சிக்கல்!
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ விசி சந்திரகுமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுக மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் போட்டியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக எதிர்பார்த்து வந்த நிலையில், விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5 ஆம் தேதி கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா, திமுக போட்டியிடுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதில், முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார், திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோரின் பெயர் அடிபட்டது. இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிட ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
2021 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸிடம் சென்றதால் வி.சி.சந்திரகுமார் போட்டியிட முடியவில்லை. சமீபத்தில் சந்திரகுமாரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சந்திரகுமாருக்கு இந்த முறை வாய்ப்பளிக்க கூடும் என்ற வகையில் கிரீன் சிக்னல் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் வி.சி.சந்திரகுமாரை திமுக தலைமை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விசி சந்திரகுமார் மற்றும் திமுக மூத்த நிர்வாகி செந்தில்குமார் பெயர் அடிபட்டு வந்த நிலையில், சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் திமுகவில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கழகப் பணியாற்றி வந்தாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் அல்லது மாற்று கட்சியிலிருந்து வரும் விவிஐபி களுக்கு என்று ஒதுக்கப்படுவதால் என்னைப் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனைக்கே எடுக்கப்படுவதில்லை என்று செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக மாவட்ட துணைச் செயலாளர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஏற்பட்ட துரோக வலியினால் இனிமேல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்வதில்லை என எனது முகநூலில் பதிவு செய்திருந்தேன். அதுபோலவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்ப மனு கொடுக்கவில்லை.
அதேபோல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என வந்த பின்பும் நான் கேட்க வேண்டாம் என அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால் சமூக ஊடங்களிலும், தினசரி நாளிதழ் மற்றும் பல்வேறு ஊடகங்கள் எனது பெயரை முன் நிறுத்தியதும், அதைத்தொடர்ந்து கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர், அவசியம் கேள் இந்த முறை உனக்குத் தான் வாய்ப்பு என உற்சாகமூட்டியதும், நானும் சராசரி மனிதனாய் பதவி சபலம் ஏற்பட்டு, அனைத்து தகுதிகளும் இருப்பதாய் எனக்கு நானே எண்ணிக்கொண்டு அதற்கான முயற்சியை முன்னெடுத்தேன்.
நீண்ட நாட்களாக கழகப் பணியாற்றி வந்தாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் அல்லது மாற்று கட்சியிலிருந்து வரும் விவிஐபி களுக்கு என்று ஒதுக்கப்படுவதால் என்னைப் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனைக்கே எடுக்கப்படுவதில்லை. 1980ல் திரு.சாயிநாதன் (மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர்) காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
1984, 1989 திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் (மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர் ), 1991 திரு.கணேசமூர்த்தி மாவட்ட செயலாளர்,(மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர்), 1996,2001 திரு.NKK பெரியசாமி மாவட்ட செயலாளர்(பவானி தொகுதியை சேர்ந்தவர்), 2006 திரு. NKKP ராஜா மாவட்ட செயலாளர் (பவானி தொகுதியை சேர்ந்தவர்), 2011 திரு. சு.முத்துசாமி, 2016 திரு. வி.சி.சந்திரகுமார், 2021 திருமகன் ஈவெரா , (காங்கிரஸ் கட்சி).
இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை குறி வைப்பதால் என்னை போன்ற ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட கழக நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைக்கே வராமல் போய்விட்டது. கட்சியின் நலன் கருதி மாவட்ட செயலாளர்களை எதிர்த்து போராடியதால், அப்போதெல்லாம் எவ்வித பொறுப்பிற்கும் வர முடியவில்லை. தற்போது மாவட்ட செயலாளரை அனுசரித்து அவருடன் இருந்தாலும் வாய்ப்பைப் பெற முடியவில்லை.
ஏனென்றால் நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன் என்பதாலும், இவன் எம்.எல்.ஏ ஆனால் கட்சியையும் கைப்பற்றி விடுவானே என்றும், எம்.எல்.ஏ என்ற நிலை மட்டும் இருந்தால் பரவாயில்லை அடுத்த நிலை அங்கீகாரத்திற்கு வந்து விடுவானே என்றும் பயந்த சிலர் எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் சில துரோகங்களால் நான் வீழ்த்தப்படுகிறேன். துரோகம் செய்யும் நபர்கள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவன் நான் மட்டுமாகவே இருக்கிறேன். "எதிரிகள் தாக்கித் தாக்கி வலுவிலக்கட்டும், நான் தாங்கித் தாங்கி வலுப்பெறுகிறேன்" என்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மனதில் வைத்தும்,
உடன்பிறப்பே, ஓய்வின்றி உழைத்திடு ! ஒரு கலங்கமுமின்றி கடமையாற்றிடு !! மக்களின் பார்வை உன் மீது..!!! என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வரியினை நெஞ்சில் சுமந்தும், "அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சாய் பறக்க விடும் ஆளை" என்ற பாடலை என் தாய் பாடுவது போன்ற உணர்வுடன் எப்போதும் போல் தடுமாறாமல், தடம் மாறாமல் அணுவளவும் இயக்கத்திற்கு துரோகம் இழைக்காமல் "வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது கழகமாக இருக்கட்டும்" என்று தலைவர் தளபதி தலைமையில் கழக பணியாற்றுவேன் என்று கழகத் தலைமைக்கும், கழகத் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்த நல் உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications