ஈரோடு வேட்பாளர்களின் சொத்து மதிப்பு: லிஸ்ட்டில் ‘டாப்’ யார்? நாதக வேட்பாளருக்கு 4.8 லட்சம் கடனாம்!
ரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவி பெயரில் 7 கோடியே 16 லட்சத்துக்கும் குடும்பச் சொத்தாக 8 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கும் சொத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
பரிசீலனைக்கு பிறகு 83 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதில், 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து, 77 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவனீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர் விவரங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு விவரங்கள், சொத்து பட்டியல் விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக சொத்துகளோடு கோடிஸ்வர வேட்பாளராக முதலிடத்தில் உள்ளார்.

இளங்கோவன் சொத்து மதிப்பு
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது மொத்த சொத்து மதிப்பு 3.50 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவியின் சொத்து மதிப்பு 7.16 கோடி. குடும்ப சொத்து மதிப்பு 8.12 கோடி. இளங்கோவனின் கடன் மதிப்பு 1.29 கோடி. இளங்கோவனின் மனைவி பெயரில் உள்ள கடன் மதிப்பு 1.71 கோடி. குடும்ப கடன் 47.55 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னரசு - 2.27 கோடி
இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவரான அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் சொத்து மதிப்பு 2.27 கோடி. அவரது மனைவியின் சொத்து மதிப்பு 1.78 கோடி. தன் பெயரிலோ தனது மனைவி பெயரிலோ கடன் எதுவும் இல்லை என்றும் வேட்பு மனுவோடு தாக்கல் செய்த அஃபிடவிட்டில் தென்னரசு தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தின் சொத்து மதிப்பு 14.74 லட்சம். வங்கி கடன் 2 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவனீதனின் சொத்து மதிப்பு 9.70 லட்சம். அவரது கணவரின் சொத்து மதிப்பு 2.69 லட்சம். மேனகாவின் கடன் மதிப்பு 4.8 லட்சம். அவரது கணவரின் கடன் மதிப்பு 3.53 லட்சம் என வேட்பு மனு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications