ஃபர்ஸ்டு ரவுண்டு.. நெக்ஸ்டு ஓட்டு! ஈரோடு கிழக்கில் வாக்களித்தார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு மாநகராட்சி பள்ளியில் தன்னுடைய வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
கடந்த ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா காலமானார். இதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையில் இருந்தே வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். அவரை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் சற்று முன்பு தன்னுடைய வாக்கை செலுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவும் தன்னுடைய வாக்கை தற்போது பதிவு செய்து உள்ளார்.

குடும்பத்துடன் வாக்களித்தார்
வாக்குப்பதிவுக்கு முன்பாக பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டு அதிமுகவினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அருகே இருக்கும் தொடக்கப் பள்ளிக்கு குடும்பத்துடன் சென்ற கே.எஸ்.தென்னரசு அங்கு இருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications