டெபாசிட்டே போய் இருக்கும்.. ஓபிஎஸ்+சசிகலா+டிடிவி.. எடப்பாடிக்கு பிரஷர் எகிறும்! பறந்து வந்த வார்னிங்
எடப்பாடி கட்சியை பாதாளத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று இவர்கள் வாதம் வைப்பார்கள்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷர் எகிற போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது.
1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதிமுகவின் இந்த தோல்வியால் எடப்பாடிக்கு பிரஷர் அதிகரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குறைவாகவே வாக்குகள்
அவர் தனது பேட்டியில், 75க்கும் கொஞ்சம் குறைவாகவே வாக்குகள் பதிவானது. எல்லா அமைச்சர்களும் வேலை பார்த்து உள்ளனர். முதல்வர் கூட களத்தில் இருந்தனர். ஈரோட்டிற்கு என்று தனி பார்முலாவை உருவாக்கி இருந்தனர். திமுக வென்றாலும் இந்த அளவிற்கு வெல்ல மாட்டார்கள் என்றே நினைத்தேன். 30 ஆயிரம் வாக்குகள் வரை வேறுபாடு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் 60 ஆயிரம் வாக்குக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். இது காங்கிரஸ் நின்ற தேர்தல் என்றாலும் திமுக தாங்கள் நின்ற தேர்தல் போலவே கருதியது. அதன்படியே தேர்தல் பணிகளை செய்தது. இதன் விளைவாக அவர்கள் வெற்றியும் பெற்று உள்ளனர்.

பல பிரச்சனைகள்
இன்னொரு பக்கம் அதிமுகவை பார்க்கையில் அவர்களிடம் பல பிரச்சனைகள் இருந்தன. அதிமுக 4 ஆக பிரிந்து கிடக்கிறது. ஆனாலும் கட்சி என்னவோ எடப்பாடி கையில் உள்ளது. சின்னம் அவரிடம்தான் உள்ளது. ஆனாலும் எடப்பாடி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார். வரிசையாக எல்லா தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருகிறார். இதெல்லாம் அவருக்கு நெருக்கடியை கொடுக்கும். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோருக்கு ஆதரவாக மாறும். நாங்கள் சொன்னோம் ஆனால் எடப்பாடி கேட்கவில்லை என்று இவர்கள் வாதம் வைக்கும் நிலை ஏற்படும். எடப்பாடி கட்சியை பாதாளத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று இவர்கள் வாதம் வைப்பார்கள்.

வாக்குவிகிதம்
வாக்குவிகிதம் மிக மோசமாகி உள்ளது. என்னதான் திமுக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தாலும் அதிமுகவும் காசு கொடுத்தது. திமுக செய்ததை அதிமுகவும் செய்தது. அதிமுக ஒன்றும் புனிதமான கட்சி. ஆனாலும் அவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கி என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. மோசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளனர். அதுவும் காங்கிரஸ் சின்னத்திடம் தோல்வி அடைந்து உள்ளனர். அவர்களின் தொண்டர்கள் என்ன ஆனார்கள். இளங்கோவன் வெல்வார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

டெபாசிட்
ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் இதுவரை இப்படி ஒரு வெற்றியை பெற்றதே இல்லை. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் அதிமுக டெபாசிட்டை இழந்து இருக்கும். அதிமுகவின் டெபாசிட் மொத்தமாக காலி ஆகி இருக்கும். காங்கிரஸிடம் அதிமுக இப்படி தோல்வி அடைந்து இருந்தால் இது எதை காட்டுகிறது. இந்த தோல்வியால் எடப்பாடிக்கு எதிரான அழுத்தம் மீண்டும் உயரும். சாதி ரீதியிலான அரசியலால் அவர் தவறு செய்துவிட்டார். எடப்பாடி என்றால் கொங்கு மண்டலம், கவுண்டர் பெல்ட் என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். அந்த கட்டமைப்பு இப்போது தவிடுபொடியாகிவிட்டது. அதோடு அந்த பிம்பம் இவருக்கு எதிராகவும் மாறிவிட்டது, என்று பத்திரிகையாளர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications