3ஆவது இடத்தை பிடித்த நாதக.. தேமுதிகவை பின்னுக்கு தள்ளிய சுயேச்சை! .. விஜயகாந்த் கட்சியினர் கலக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் தேமுதிக குறைந்த அளவு வாக்குகளையே பெற்று 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் தேமுதிக குறைந்த அளவிலான வாக்குகளையே பெற்றுள்ளது. குறைந்தபட்சம் 2000 வாக்குகளை கூற பெறவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது. இதில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளாக நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வந்தார்.

வாக்குகள்
ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளையும் அதிமுக 43981 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 8474 நாம் தமிழர் கட்சி 10804 வாக்குகளையும் தேமுதிக 1177 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் வாக்காளர்களை அடைத்து வைத்து பணம், பரிசு பொருள்கள், கறி சோறு போடப்பட்டதாக அரசியல் கட்சிகள் மீது புகார்கள் மாறி மாறி தேர்தல் ஆணையத்தை சென்றடைந்தன.

நாம் தமிழர் - திமுக
இந்த நிலையில் நாம் தமிழர் - திமுக இடையே அடிதடி தகராறு நடந்து வழக்குகள் எல்லாம் பதிவாகின. பொதுவாக தேர்தல்களில் ஒரு 4 கட்சி போட்டியிடுகிறது என்றால் அதில் இரு கட்சிகள் அதிக வாக்குகளையும் மீதமுள்ள இரு கட்சிகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கும். அது போல் இந்த தேர்தலில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும் அதிமுக இரண்டாவது இடத்திலும் உள்ளது.

3ஆவது, 4ஆவது இடம்
இதில் 3 ஆவது, 4 ஆவது இடம் யாருக்கு என்பதுதான் கேள்வி. அதில் தேமுதிக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. மேலும் சுயேச்சை வேட்பாளர் முத்து பாபாவை விட தேமுதிக வேட்பாளர் ஆனந்த் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார். இது தேமுதிக தொண்டர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி 2006 இல் நடந்த முதல் சட்டசபை தேர்தலிலேயே விஜயகாந்த் எம்எல்ஏவானார்.

சட்டசபை தேர்தல்
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 22 இடங்களில் தேமுதிக வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தில் விஜயகாந்த் அமர்ந்தார். அப்படிப்பட்ட தேமுதிக அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணியை சரிவர தேர்வு செய்யாததால் சறுக்கியது.

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். அதிமுக, அமமுகவுடன் கூட்டணி அமைத்தும் தேமுதிக புத்துணர்வு பெறவில்லை. மேலும் மேலும் பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தை கூட தேமுதிகவால் பெற இயலவில்லை. இதை எண்ணி விஜயகாந்த் ரசிகர்கள் மனவேதனையில் உள்ளனர்.

2010 இல் தொடங்கிய கட்சி
ஆனால் நாம் தமிழர் கட்சி 2010 ஆம்ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 சட்டசபை தேர்தலிலம் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதையடுத்து 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட தொடங்கியது. இன்னும் ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாவிட்டாலும் தனது கொள்கையில் சீமான் உறுதியாக உள்ளதால் அவருக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகுகிறது.

தேமுதிகவின் நிலை
ஆனால் தேமுதிக ஒவ்வொரு முறையும் தனது கொள்கையை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு முறை ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகிறது. இது அந்த கட்சியினருக்கே பிடிக்கவில்லை. 2014, 2016 நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலின் போதே தொண்டர்கள் தனித்து போட்டியிடலாம் என்றனர். ஆனால் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார். இதுவே தேமுதிக கரைய காரணமாக இருக்கும் என கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு மேலும் கட்சியின் நிலை குறித்து சுய பரிசோதனை செய்யாவிட்டால் இனி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தேமுதிகவுக்கு படுதோல்வி கிடைக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications