காலை உணவுத் திட்டத்துக்கும், ரூ.500, ஆயிரத்துக்கும் மக்களை கையேந்த வைத்தது யார்? - கடுகடுத்த சீமான்
ஈரோடு: சோற்றுக்கு இல்லாத பிச்சைக்கார கூட்டமாக்கிவிட்டு ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் மக்களை கையேந்த வைத்து விட்டீர்கள். அதிகாலையில் பிள்ளைக்கு உணவு இல்லாத நிலைக்கு மாற்றிவிட்டு நல்லாட்சி தருகிறேன் என்று பேசுகிறீர்கள் என முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் கூறியதாவது:- தேர்தல் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கொடுப்பதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியான பெண்களுக்கு என்று சொல்கிறார்கள். தகுதியை கணக்கிட நீங்கள் யார்.. எதுவுமே இருக்கக் கூடாது பிச்சைக்காரியாக இருந்தால் தாரேன் என்கிறீர்கள்..

அதுவும் கட்சிக்காரியாக இருந்தால் கொடுப்பீர்கள்.. இதுதான் உங்கள் கதை. என்ன நிறைவேற்றப்பட்டு இருக்கு என்று சொல்லுங்கள். பேருந்தில் இலவச பயணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்கள். நாங்கள் அதை கேட்கவே இல்லை. புதிதாக விமான நிலையம் என்று நாங்கள் கேட்டோம்.. இலவச பஸ் பாஸ் கொடுங்க என்று கேட்டோமோ... சாலைப்பணியாளர் அத்தனை ஆயிரம் பேர் வீதியில் நிற்கிறார்கள்..
துப்புரவு பணியாளர் வேலை இல்லாமல் நிற்கிறார்கள்... மாணவர் போராடுகிறார்கள்.. செவிலியர் போராடுகிறார்கள்... நாடே தெருவில் நின்று போராடும் போது நல்லாட்சி கொடுக்கிறேன் என்று சொல்வது கேவலமாக இல்லையா உங்களுக்கு" என்றார். அப்போது பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சீமான், திமுக எத்தனை ஆண்டு ஆட்சி செய்துள்ளது. நாட்டில் என்ன வளம் இல்லை. ஆனால் காலையில் பிள்ளைகள் பட்டினியாக வரும் நிலைக்கு வைத்திருந்தால் பிச்சைக்காரர்களாகத்தானே வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் வளர்ச்சியை பற்றி பேசுகிறீர்கள். நல்லாட்சியை பற்றி பேசுகிறீர்கள். அதிகாலையில் பிள்ளைக்கு உணவு இல்லாத நிலைக்கு மாற்றிவிட்டு என்ன பேசுகிறீர்கள்.
மதியம் உணவு கொடுக்க வேண்டும். காலையிலும் கொடுக்க வேண்டும். சோற்றுக்கு இல்லாத பிச்சைக்கார கூட்டமாக்கிவிட்டு ஆயிரத்துக்கும், ஐநூறூக்கும் மக்களை கையேந்த வைத்து விட்டீர்கள். தீபாவளி வந்தால் வேஷ்டி சட்டை, கரும்பு சர்க்கரை கிடைக்குமா என கையேந்த வைத்து விட்டு இதெல்லாம் ஒரு ஆட்சி முறை என எப்படி சொல்வது. பிள்ளைகள் காலை உணவு கூட இல்லாமல் குழந்தை வருகிறது என்றால் எவ்வளவு வறுமையில் இருக்கிறது என்று பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications