“கட்சி பொறுப்பை பறிப்பார்கள் என நினைக்கவில்லை.. ஒருங்கிணைக்கும் பணி தொடரும்” செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு: "என்னை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி தொடரும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் கெடு விதித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனையை அடுத்து அதிமுக ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். செங்கோட்டையன் மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "என்னை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு தொண்டனின் கருத்தைப் பிரதிபலித்தேன். என்னை நீக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். அதற்காக நான் கழகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மனதில் தோன்றிய கருத்துகளைச் சொல்ல தொண்டனுக்கு உரிமை உண்டு.
நமது பொதுச்செயலாளர் கூட பல்வேறு மேடைகளில் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவில்தான் ஜனநாயகம் இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் கருத்துகளைக் கூறலாம் என மேடைதோறும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். இன்று எனக்கு எதிரான நடவடிக்கைக்கு காலம்தான் பதில் சொல்லும்.
இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி தொடரும். சிலர் என்னிடத்தில் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள். தொண்டர்கள் எல்லோரும் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களும், காலில் வேண்டுமானாலும் விழுகிறோம், இயக்கத்தில் எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என காஞ்சிபுரத்தில் பேசி இருக்கிறார்கள். என் போன்றோர் இந்தக் கருத்தை வெளிப்படுத்துவது கட்சிக்கு நலன் பயக்கும் என்ற அடிப்படையிலேயே நான் பேசினேன். காலம் தான் இதற்கு பதில் சொல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications