செங்கோட்டையன் நாளை முக்கிய அறிவிப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த செக் வைக்க திட்டம்
ஈரோடு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. பிரிந்தவர்களைசேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் வைத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.. மாறாக அவரை மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கினார். இந்நிலையில் நாளை செங்கோட்டையன் இந்த விவகாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், சசிகலா,டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அவர்களது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த சூழலில் கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆனால் அடுத்தடுத்த தோல்விகளை காரணம் காட்டி, பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கும் சில மூத்த தலைவர்கள் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

பாஜக நம்பிக்கை
மறுபுறம் பாஜகவும் பிரிந்தவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்தால்,அதிமுக பலமாகி, திமுகவை 2026ல் வலிமையாக எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறது. பாஜகவும் தன் பங்கிற்கு இந்த விஷயத்தில் கட்சியை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். ஏற்கனவே ஓ பன்னீர்செல்வமும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். தேமுதிக மற்றும் பாமக யாருடன் என்பது இன்னமும் தெரியவில்லை..
பலரும் ராஜினாமா
இது ஒருபுறம் எனில்அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. செங்கோட்டையனின் அனைத்து பதவிகளையும் பறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
ஓபிஎஸ் அணியினர் வருகை
இதுஒருபுறம் எனில், கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள கே.ஏ.செங்கோட்டையனின் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க வந்துள்ளார்கள். பின்னர் அவர்கள் செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
நன்றி சொன்ன செங்கோட்டையன்
இதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இருந்து 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பற்று கொண்ட அ.தி.மு.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆதரவுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கூடுதலாக தொண்டர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறினார்.
நாளை முக்கிய அறிவிப்பு
கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஈரோடு தாண்டி, தமிழகம் முழுவதிலும் இருந்தும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என நினைப்பவர்கள் ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் இந்த கருத்தை கூறியிருக்கிறார்கள். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த செக் வைக்கும் அளவிற்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications