"பிரதமர் மோடி, அண்ணாமலை.. " ஈரோடு தேர்தல்.. அதிமுக பணிமனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. கவனிச்சீங்களா
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குப் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.. இதற்கிடையே அதிமுக பணிமனையில் திடீர் மாற்றம் ஒன்று நடந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இடைத்தேர்தல் என்பதால் பெரியளவில் வென்றாக வேண்டும் என்ற முனைப்பில் திமுக கூட்டணி இறங்குகிறது. காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக திமுக அமைச்சர்கள் தொடங்கி பலரும் அங்குத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு
இந்தத் தேர்தலில் அதிமுக சற்று லேட்டாகவே கோதாவில் இறங்கியது. ஏனென்றால், முதலில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், எடப்பாடி என இருவருமே வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக இறங்கினார். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் வாங்கிவிட்டார். அதேபோல குக்கர் சின்னம் உறுதியாகக் கிடைக்காது என்பதால் அமமுகவும் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கிவிட்டது

இரட்டை இலை
இதன் மூலம் அதிமுகவுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலை வாக்குகள் அப்படியே கிடைக்க உள்ளது. அதிமுக தரப்பில் செங்கோட்டையன் தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அதிமுக முக்கிய தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே அதிமுகவின் தேர்தல் பணிமனையே பல சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருந்தது. முன்பு, இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்த போது, எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் தேர்தல் பணிமனைகளை அமைத்திருந்தனர்.

ஓபிஎஸ்
அப்போது ஈரோடு முனிசபல் காலனியில் இருந்த ஓபிஎஸ் பணிமனையில், பேனரில் ஒரு பக்கம் ஆள் உயர ஜெயலலிதா படம் இருந்தது. இதன் மற்றொரு புறம் ஓபிஎஸ் படத்துடன் ஆள் உயரப் படத்துடன் பிரதமர் மோடியின் ஆள் உயரப் படமும் இருந்தது. மேலும், அதில் ஜேபி நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படமும் இருந்தது. அதேபோல பணிமனைக்கு முன்பு அதிமுக கொடியுடன் பாஜகவின் கொடிகளும் இருந்தது. ஆனால், அப்போது எடப்பாடியின் பணிமனை நேர்மாறாக இருந்தது.

எடப்பாடி
எடப்பாடி தரப்பு பெருந்துறை சாலையில், அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனையைத் திறந்திருந்தனர். அதில் முதலில் வைக்கப்பட்ட பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று இருந்தது. இருப்பினும், அன்று மாலையே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று மாற்றப்பட்டது. அதேநேரம் அங்கு பாஜக கொடி அல்லது பாஜக தலைவர்களின் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆள் உர படங்களே இருந்தது. மறுநாள் அந்த பேனரையும் நீக்கிவிட்டு புதிய பேனரை வைத்தார்கள்.

திடீர் மாற்றம்
4 பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரது ஆள் உயரப் படங்கள் இருந்தது. அதேபோல கூட்டணிக் கட்சித் தலைவர்களா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி படங்கள் இருந்தன. அதில் அண்ணாமலை படம் இருந்ததாகத் தெரியவில்லை.. இதற்கிடையே இப்போது மீண்டும் 5ஆவது முறையாக அவர்கள் பேனரை மாற்றியுள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வேட்பாளர் என்று தென்னரசுவின் படம் இடம்பெற்றுள்ளது.

நோட் பண்ணுங்க
அதேபோல பிரதமர் மோடியின் பெரிய படமும் அதில் இடம்பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படமும் அதில் இடம்பெற்றுள்ளது. இப்படி ஒரு பேனரிலேயே ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.. இருப்பினும், இந்த முறை இரட்டை இலை வாக்குகள் எங்கும் சிதறாது என்பதால், வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன் அதிமுக தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications