ரஜினியிடம் பேசி மிளகு ரசமே கிடைத்தது! விஜய் முதல்வர் கனவை தியாகம் செய்யணும்! தமிழருவி மணியன் பேச்சு
ஈரோடு: ரஜினியிடம் 3 ஆண்டுகளாக மாற்று அரசியல் பேசி பேசி 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. விஜய் தமிழக மக்களுக்காக முதல்வர் கனவை தியாகம் செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்த தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. 3 ஆண்டுகளாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது.

கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். வெறும் 20 சதவீத வாக்குகளை வைத்து முதல்வராக முடியாது.பாஜக, அதிமுகவின் 41 சதவீத வாக்குகளுடன் விஜய்யும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.
நமது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி விஜய் முதல்வர் கனவை தியாகம் செய்துவிட்டு தமாகா அணிக்கு வர வேண்டும்" என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் இயக்கம். ஜி.கே.வாசன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடந்தது.
அப்போது ஜி.கே.வாசன் பேசுகையில், தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சியும் ஒன்றாக இணைந்தது வருங்காலங்களில் அரசியல் களத்திற்கு வசந்த காலமாக இருக்கும். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள். இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என பேசியிருந்தார்.
சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். இவரது இலக்கிய திறனை பாராட்டி, தமிழக முதல்வர் காமராஜர், தமிழருவி எனும் பெயரால் பாராட்டினார். அன்று முதல் தமிழருவி மணியன் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பல அரசியல் கட்சிகளில் களம் கண்டவர். ஆரம்பத்தில் காந்தி மக்கள் இயக்கம் எனும் அமைப்பை தொடங்கினார்.
தமிழருவி மணியன் சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் பயின்று பட்டம் பெற்றார். இவர் காமராஜரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ் எனப்பட்ட நிறுவன காங்கிரஸ் ஆகியவற்றில் இணைந்திருந்தார்.
காமராஜரின் மறைவுக்கு பிறகு ஜனதா கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக இருந்தார்.
ராமகிருஷ்ணன் ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி எனும் கட்சியைத் தொடங்கிய போது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் தமிழக லோக்சக்தி என்ற கட்சியைத் தொடங்கினார்.
மூப்பனாரின் அழைப்பை ஏற்று தமிழக லோக்சக்தி கட்சியை கலைத்துவிட்டு தமாகாவில் இணைந்து அதன் பொதுச் செயலாளர் ஆனார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் தமாகா இணைந்த போது இந்திய தேசிய காங்கிரஸின் தமிழகத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.
2008ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சினையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறு ஏற்பட்டு அதிலிருந்து விலகினார். 2009ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்பதை தொடங்கினார். பின்னர் அதை 2022 இல் காமராஜர் மக்கள் கட்சி என மாற்றினார். தற்போது இந்த காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு அதன் நிர்வாகிகளுடன் தமாகாவில் மீண்டும் இணைந்துவிட்டார். ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழருவி மணியனும் காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளும் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications