“ஸ்டாலினையே எரிப்போம்” என பேசிய நாம் தமிழர் நிர்வாகி? சுற்றிவரும் பகீர் வீடியோ - கொந்தளித்த திமுக
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே எரிப்போம் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் பேசியதாக வீடியோ பரவி வருகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே எரிப்போம் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் பேசியதாக பரவி வரும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பல்வேறு இழுபறிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

சீமான் பிரச்சாரம்
தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் அங்கு வீதி வீதியாக சென்றும், பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

முதலியார் பற்றி பேச்சு
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நாம் தமிழர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "முதலியார்களிடம் விஜயநகர மன்னர்கள் பட்டாடை செய்து கேட்டார்கள். ஆனால் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று முதலியார்கள் மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து விஜயநகர மன்னர்கள் அழைத்து வந்தனர்.

அருந்ததியர்கள் குறித்து சர்ச்சை
இந்த நிலத்தில் கடைசியாக என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டபோது மறுத்துவிட்டனர். எனவே வேறு வழியின்றி ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்." என்று பேசினார்.

சீமான் உருவ பொம்மை எரிப்பு
அருந்ததியர்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியினர் ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தங்கள் பகுதிக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் மோதலும் வெடித்தது. அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர் மீது வழக்கு
ஆனால், தனது கருத்துக்கு சீமான் வருத்தம் தெரிவிக்க மறுத்தார். இதற்கிடையே சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சீமான் மீது வழக்கு
அதேபோல் அருந்ததியர்கள் குறித்த கருத்துக்காக சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அந்த கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 6 பேர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.
|
பரபரப்பு வீடியோ
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்று சொல்லப்படும் நபர் பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், "அண்ணன் சீமான் வரலாற்றில் உள்ள செய்தியை சொன்னதற்கு அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய சொல்கிறார்கள்.

ஸ்டாலினையே எரிப்போம்
திராவிட சிந்தனையில் உள்ளவர்கள் ஒன்றைய மட்டும் புரிந்துகொள்ளுங்கள். நினைத்தால் ஸ்டாலினையே எரிப்போம்." என்று அவர் ஆவேசமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியையே தமிழ்நாட்டின் நலன் கருதி தடை செய்ய வேண்டும் என திமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்திட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications