நாதகவுக்கு கிடைத்த வாக்குகள் ஒரு விபத்து.. விசி சந்திரகுமார் கடும் தாக்கு
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத போது நாம் தமிழர் கட்சி வாங்கியுள்ள வாக்குகள் ஒரு விபத்துக்கு சமமான ஒன்று என திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நோட்டாவுக்கும் கூட கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறிய அவர், எதிர்க்கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 61,744 வாக்குகளை பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 13,437 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நோட்டாவுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.

திமுக மற்றும் நாதக வேட்பாளர்களுக்கு இடையில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பெற்ற வெற்றியை போல் திமுக மீண்டும் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தொண்டர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், அண்ணா அறிவாலயத்திலும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் பேசுகையில், தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைபடி எங்களின் பிரச்சாரம் இருந்தது. இதனால் தோல்விக்கு பின் ஜனநாயகம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக நியாயமாக ஜனநாயக முறைப்படி நடக்கும் என்று முன்பே அமைச்சர் கூறினார். அப்படிதான் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தல் பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. போட்டியிடாத சூழலில் நாதக போட்டியிட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் ஆளுங்கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத போது, வேறு ஒரு நபர் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெறுவார். இப்படியான சம்பவங்கள் முன்பும் நடந்திருக்கிறது. இதனால் நாதக பெற்றுள்ள வாக்குகள் விபத்துக்கு சமம்.
இதனால் நாதகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று சொல்ல தேவையில்லை. இதனை வாக்கு வங்கியாக நினைத்து அரசியல் செய்தால், அவர்கள் இன்னும் பெரிய தோல்வியை சந்திப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத போது, திமுகவுக்கு எதிரான வாக்குகள் நாதகவுக்கு சிதறிப் போகும். வழக்கம் போல் திமுகவை ஆதரிப்பவர்கள், திமுகவையே ஆதரித்துள்ளார்கள்.
நோட்டாவுக்கு கூட கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கக் கூடிய மக்கள் கூட எங்களுக்கு வாக்களித்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி இது. நாம் தமிழர் கட்சியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். திமுக எந்த காலத்திலும் யாருக்கும் அஞ்சியதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications