ஓசூர் வளர்ந்தால் சிக்கல்.. மெட்ரோ ரயில் இணைப்பிற்கு பெங்களூர் முட்டுக்கட்டை? ஷாக்! அதிர்ச்சி பின்னணி
ஓசூர்: ஓசூரில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோவோடு பெங்களூர் மெட்ரோவை இணைப்பதற்கு கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள், மாவட்டங்கள் பல உள்ளன. உதாரணமாக கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகியவை தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்கள் ஆகும். அதிலும் ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது.

பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்கள் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஓசூர்: முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்படி பல்வேறு விஷயங்களால் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருக்கு செல்ல வேண்டிய பல்வேறு முதலீடுகள் ஓசூரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் ஓசூரில் விமான நிலையம் அமைவதை அப்போதே ஒரு தரப்பினர் கர்நாடகாவில் எதிர்த்தனர்.
அதன்படி பெங்களூரில் இருந்து குறிப்பிட்ட சுற்றுவட்டார பகுதி வரை விமான நிலையம் அமைக்க கூடாது என்ற விதி உள்ளதால் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் சிக்கல் உள்ளது. இதுவே ஓசூருக்கு வளர்ச்சி ரீதியாக பெரிய முட்டுக்கட்டையாக பார்க்கப்பட்டது.
மெட்ரோ: இந்த நிலையில்தான் ஓசூரில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோவோடு பெங்களூர் மெட்ரோவை இணைப்பதற்கு கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஓசூரில் மெட்ரோ கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. இதில் தமிழ்நாட்டு எல்லை உள்ளே வரும் மெட்ரோவை தமிழ்நாடு அரசு கட்டும். அதே சமயம் பெங்களூர் எல்லை உள்ளே வருவதை கர்நாடக அரசு கட்டும் என்று கூறப்பட்டது.
அதன்படி ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணி தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. மெட்ரோ ரயில் அமையும் 20.5 கி.மீ தூரத்தில் 11.7 கி.மீ கர்நாடகாவிலும், 8.8 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. தற்போது எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. இங்கே பணிகள் முடிந்த பின் ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் கர்நாடக அரசு இதை விரும்பவில்லையாம். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ஓசூரில் குறைந்த வாழ்க்கைச் செலவு மிக மிக குறைவு. அதேபோல் தொழில்துறை நிலம் கிடைப்பது மிகவும் எளிது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் பெங்களூருக்கு எதிராக இந்த விஷயம் திரும்பும். இதனால் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டம் கர்நாடகாவிற்கு எதிராக மாறக்கூடும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார.
20.5 கிமீ மெட்ரோ பாதையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை CMRL ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதில் முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓசூருக்குள் மட்டும் கூடுதல் கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications