கொரோனா நோயாளிகளுக்கு அனந்தய்யாவின் லேகியத்தை தர ஆந்திரா அரசு ஒப்புதல் - கண் சொட்டுமருந்துக்கு தடை
அனந்தய்யாவின் மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவை குணப்படுத்த லேகியம் மட்டும் கொடுக்கலாம் எனவும் கண் சொட்டு மருந்துக்கு அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: அனந்தய்யாவின் மூலிகை மருந்தினை கொரோனா நோயாளிகளுக்குத் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு லேகியம் மட்டும் தரலாம் என்றும் கண் சொட்டு மருந்து போட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு நடத்திய ஆய்வின் மூலம் அனந்தய்யாவின் மூலிகை மருந்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காது எனவும் இதனை உட்கொண்டால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினம் அடுத்த மூலக்கூறு கிராமத்தில் வசிப்பவர் போகினி ஆனந்தய்யா, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு தயாரித்து வழங்கிய நாட்டு மருந்து நல்ல பலன் அளிப்பதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கவும் 6 விதமான மூலிகை பொருட்களை கொண்ட லேகியத்தை ஆனந்தய்யா வழங்கி வந்தார்..
ஆந்திராவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் இலவசமாக தயாரித்து வழங்கிய மூலிகை கண் சொட்டு மருந்து கொரோனாவை குணப்படுத்தியதாக கூறி ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்து குவிந்தது கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் தயாரித்த மருந்து, பரிசோதிக்கப்பட்டு அரசின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

கொரோனா மருந்து
போனிகி அனந்தய்யா. இவர் ஆயுர்வேத மருந்துகள், லேகியம் தயாரித்து உள்ளூர் அளவில் பிரபலமாக திகழ்ந்த நிலையில் சில மூலிகைகளை கொண்டு இவர் தயாரித்த மருந்து, கொரோனாவை உடனடியாக குணப்படுத்துகிறது என செய்திகள் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் குவிந்தனர்.

கூட்ட நெரிசல்
அனந்தய்யா தயாரித்த லேகியத்தை சாப்பிடவும், கண் சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். மேலும் மருத்துவர் அனந்தய்யா தயாரித்து வழங்கிய மருந்தை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்தனர்.

நீங்கிய பிரச்சினை
அனந்தய்யாவின் மருந்தை போட்டுக்கொண்ட ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த தீவிர தொற்றாளர்கள் உடனடியாக குணமடைந்து பேசத்தொடங்கியதாகவும் தகவல்கள் உள்ளன. கடந்த வாரம் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா பாதித்தவர்கள் அங்கு குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது, மேலும் கொரோனா பரவும் சூழலும் ஏற்பட்டதால் நிலைமையை சமாளிக்க காவல்துறையினர் வந்தனர்.

ஆய்வுக்கு போன மூலிகை
இந்த விவகாரம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கவனத்திற்கு சென்றதையடுத்து அனந்தய்ய தயாரித்துள்ள மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என்ற உண்மையை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு ஐசிஎம்ஆர் குழுவினரை கேட்டுக்கொண்டார். மேலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை மருந்து விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் முதல்வர் ஜெகன் உத்தரவிட்டார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
அனந்தய்யாவின் மருந்தை மாநில அரசு தடை செய்யக்கூடாது என சிலர் ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டனர். இதனையடுத்து மருந்துக்கான ஒப்புதல் குறித்து ஆந்திர அரசு முடிவு எடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.

மூலிகை மருந்துக்கு ஒப்புதல்
இந்நிலையில் ஆந்திர அரசு நடத்திய ஆய்வின் மூலம் அனந்தய்யாவின் மூலிகை மருந்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனந்தய்யாவின் மூலிகை மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு லேகியம் மட்டும் தரலாம் என்றும் கண் சொட்டு மருந்து போட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கொரோனா மருந்து
அரசின் அனுமதி கிடைத்தால் முழு வீச்சில் மருந்து தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவேன் என்று ஆயுர்வேத மருத்துவர் அனந்தய்யா முன்னர் கூறிய நிலையில் தற்போது ஆந்திர அரசு அவருடைய மூலிகை மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications