பெண் ஐடி ஊழியர்களுக்கு அடித்த லக்.. WFH கொடுக்க போவதாக அறிவித்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்: பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை (Work Life Balance) மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திரப் பிரதேச அரசு, குறிப்பாக பெண்களுக்கு "வீட்டிலிருந்து வேலை" (Work From Home) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Information Technology (IT) and Global Capability Centers policy 4.0.) கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த புதிய முயற்சியை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டார்.

பெண்களின் பங்களிப்பு
தனது பதிவில், "இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்தத் துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறேம். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது" என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், "வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.
எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
இந்த கொள்கை, குறிப்பாக பெண்களுக்கான தொலைவிலிருந்தும் இஷ்டப்படியான வேலை நேரத்தை வழங்கி, வேலைவாய்ப்பு விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் இது "வேலை-வாழ்க்கை சமநிலைக்கு ஒரு புதிய சகாப்தம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமாகி உள்ளது என்றும், இந்த புதிய கொள்கை பெண்கள் அதிக அளவில் வேலைக்கு வர உதவும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் 90-மணி வேலை வாரம் குறித்த விவாதங்கள் பெருகியுள்ள நிலையில், ஆந்திராவின் இந்த முன்முயற்சி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி செயல்படுத்தப்படும் என்பது இப்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.
WFH வசதிகளும், சவால்களும்
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், உலகெங்கிலும் வேலை செய்யும் முறைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அலுவலகங்களுக்குச் சென்று வேலை செய்த ஊழியர்கள், தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த "வீட்டிலிருந்து வேலை" (Work From Home - WFH) முறை, பல புதிய அனுபவங்களையும், சவால்களையும் உருவாக்கியது.
தொடக்கத்தில், வீட்டிலிருந்து வேலை செய்வது வசதியாகவும், பயண நேரம் மிச்சப்படுத்துவதாகவும் பலரும் உணர்ந்தனர். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்தவும் இது உதவியது. தொழில்நுட்ப வளர்ச்சியும், இணைய வசதிகளும் வீட்டிலிருந்து வேலை செய்ய ஏதுவான சூழலை உருவாக்கின.
இருப்பினும், இந்த முறை சில சிக்கல்களையும் கொண்டு வந்தது. வீட்டில் வேலை செய்யும் போது, வேலை நேரம் மற்றும் ஓய்வு நேரம் பிரிப்பது கடினமானது. சிலருக்கு வீட்டில் அமைதியான வேலைச்சூழல் கிடைக்கவில்லை. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில், வேலை செய்வது சவாலாக இருந்தது. மேலும், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், தனிமை உணர்வு சிலரை வாட்டியது.
இருப்பினும், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகும், பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றன. இது ஊழியர்களுக்கு வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த உதவுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மைய கொள்கை 4.0-ன் ஒரு பகுதியாக, குறிப்பாக பெண்களுக்கு "வீட்டிலிருந்து வேலை" கொள்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications