ஆந்திராவிலும் வாலாட்டும் அணில்.. ஆட்டோ மீது மின்கம்பி விழுந்த விபத்து.. காரணம் அணில் தானாம்
ஹைதராபாத்: ஆந்திராவில் நேற்று ஆட்டோ மீது மின் கம்பி விழுந்து ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மழைக் காலத்தில் சாலைகளில் வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மழைக் காலங்களில் சாலைகள் பயணிக்கவே முடியாத சூழலில் தான் இருக்கும்.
மேலும், பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. அப்படி அறுந்து விழும் மின் கம்பிகள் காரணமாகப் பல நேரங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது.

ஆந்திரா
அதுபோன்ற ஒரு விபத்து தான் ஆந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தின் சத்ய சாய் என்ற மாவட்டத்தில் உள்ள குத்தம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 10 பேர் விவசாயப் பணிகளுக்காக அருகே இருக்கும் கிராமத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது 11 KV உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.

விபத்து
உயர் மின் அழுத்தக் கம்பி என்பதால் ஆட்டோவிலும் தீ பிடித்துள்ளது. அது ஆட்டோ முழுக்க மளமளவெனப் பரவி உள்ளது. ஆட்டோ சீட்டுகள் ரெக்சின் கவரால் செய்யப்பட்டு இருந்ததால், தீ மளமளவென பரவியது. பற்றி எரிந்து கொண்டு இருந்த அந்த ஆட்டோவில் இருந்து சில பேரால் மட்டுமே தக்க நேரத்தில் வெளியே வர முடிந்தது. மற்றவர்களால் சரியான நேரத்தில் வெளியே வர முடியவில்லை.

ஐந்து பேர் பலி
இந்த கோர விபத்தில் ஐந்து பேர் உடல் கருகி இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனந்தபூரிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில எரிசக்தித்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்தார்.

விசாரணை
இந்தச் சம்பவத்தில் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல அம்மாநில மின் வாரியமும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விபத்து எதனால் ஏற்பட்டு இருக்கலாம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த மின் கம்பி 50 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.

அணில்
மின்கம்பத்தில் மீது அணில் ஒன்று குதித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆந்திரப் பிரதேசத்தின் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் (APTRANSCO) அதிகாரிகள் கூறுகையில், "உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கம்பியில் திடீரென அணில் ஒன்று குதித்து உள்ளது. இதில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு உள்ளது. மேலும், மின் கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்துள்ளது" என்று தெரிவித்தனர்












Click it and Unblock the Notifications