செம.. நிலவை நெருங்கிய சந்திரயான் 3.. சுற்று வட்டப்பாதை மேலும் குறைப்பு.. இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்
ஐதராபாத்: நிலவிற்கும் சந்திரயானுக்கும் இடையேயான சுற்று வட்டப்பாதையின் தூரம் 3-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. 1,347 கி.மீ தூரத்தில் இருந்து 177 கி.மீ வரை சந்திரயான் 3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்படுகிறது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த 2019 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2, 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் - 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அது தனது இறுதி இலக்கினை அடைய பல்வேறு படிநிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதாவது, நிலவை நோக்கி இந்தியாவின் சாதனைப் பயணத்தை செய்துகொண்டு இருக்கும் சந்திராயன் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்கு சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பூமியின் சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் தற்போது பயணித்து வருகிறது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான்-3-ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆம் தேதி சந்திரயானுக்கும் நிலவிற்கும் இடையிலான சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டது.

கடந்த 9 ஆம் தேதி இரண்டாவது முறையாக குறைக்கப்பட்ட நிலையில்,மூன்றாவது முறையாக இன்று சந்திரயான் 3 விண்கலத்திற்கும் நிலவிற்கும் இடையிலான சுற்று வட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. 174 km x 1437 வரை சந்திரயான் 3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. நிலவை நோக்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் மிக முக்கிய கட்டமாக இது பார்க்கப்படுகிறது. இனி வரும் ஆகஸ்ட் 16 அன்று, சந்திரயான்-3 விண்கலம் 100 கி.மீ வட்ட சுற்றுப்பாதையில் நுழையும்.
ஆகஸ்ட் 17 அன்று, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிந்து செல்லும். தரையிறங்கும் தொகுதி பிரிந்ததும், அதனை 30 கி.மீ x 100 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகர்த்துவார்கள். ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும். ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications