"ஆர்.கே நகர் மாடல்".. முட்டி மோதிய பாஜக - டிஆர்எஸ்! தெலுங்கானாவில் தீ பறந்த முனுகோடு! மூழ்கிய தாமரை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசியலை உலுக்கி வந்த மோனுகுடு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக தோல்வி முகம் கண்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்து தேவையின்றி பாஜகவில் இணைந்து எம்எல்ஏ பதவியையும் இழந்து இருக்கிறார் ராஜகோபால் ரெட்டி.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல், திருமங்கலம் இடைத்தேர்தல்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. இதில் கட்சிகள் மக்களுக்கு பணம் கொடுத்ததாகவும், டோக்கன் மூலம் பணம் விநியோகம் செய்ததாகவும், மது பாட்டில்கள், பிரியாணி, உடைகளை வீடு வீடாக வழங்கியதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன.
இந்த தேர்தல்கள் அப்போது தேசிய அளவில் விவாதிக்கப்பட்டன. அதிலும் ஆர். கே நகர் தேர்தல் மிகப்பெரிய அளவு கவனிக்கப்பட்டது.

ஹைதராபாத் இடைத்தேர்தல்
இந்த தேர்தல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் விறுவிறுப்பாக நடந்ததுதான் தெலுங்கானாவில் உள்ள முனுகோடு தேர்தல். அங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர் கோமதி ரெட்டி ராஜகோபால ரெட்டி. முன்பு எம்பியாக இருந்தவர் 2018 சட்டசபை தேர்தலில் அந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனார். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி மோசமாக பின்னடைவை சந்தித்து இருந்த நிலையில், இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது.

ராஷ்டிரிய சமிதி
ஏனென்றால் இங்கு ஒருமுறை மட்டுமே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வென்றுள்ளது. இங்கு 6 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. 5 முறை சிபிஐ கட்சி வென்றுள்ளது. இங்கு ரெட்டிகள் அதிகம் இருப்பதால் பொதுவாக ரெட்டி வேட்பாளர்களையே கட்சிகள் நிறுத்தும். ராவ் பிரிவு வாக்காளர்களும் இங்கு அதிகம் உள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் ராஜகோபால் ரெட்டி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

ஆர்கே நகர்
இதன் காரணமாகவே அங்கு தற்போது சட்டசபை இடைத்தேர்தல் வந்து உள்ளது. இதையடுத்து இங்கு காங்கிரஸ் சார்பாக பல்வாய் ஸ்ரவந்தி ரெட்டி நிறுத்தப்பட்டார். அதேபோல் டி ஆர் எஸ் கட்சி சார்பாக குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டார். இவர் இதற்கு முன் ராஜ்கோபால் ரெட்டியிடம் 2018 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பாக ராஜகோபால் ரெட்டி அங்கு களமிறக்கப்பட்டார்.

தீவிர பிரச்சாரம்
இந்த தேர்தலுக்காக கடந்த இரண்டு வாரமாக தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. முக்கியமாக தேர்தலுக்காக பல கோடி செலவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. முக்கியமாக ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் 4000 ரூபாயை வீடு வீடாக வந்து கொடுத்ததாகவும், இன்னொரு வேட்பாளர் 6000 ரூபாய் கொடுத்ததாகவும் பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இது போக வீட்டிற்கு மதுபான பாட்டில்கள், சில இடங்களில் பரிசு பொருட்கள், தீபாவளி அன்று சிறப்பு பரிசுகள் என்று பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டன.

வீடியோக்கள்
இதற்கான வீடியோக்கள் கூட பல இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அரசியல் ரீதியாக இந்த தேர்தல் பாஜக - தெலுங்கனா ராஷ்டிரிய சமிதி இடையே மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்டது. டிஆர்எஸ் கட்சி ஆளும் கட்சியாக இங்கு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக இருந்தது. அதேபோல் பாஜக தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை விட நாங்கள்தான் வலுவானவர்கள் என்பதை நிரூபிப்பதற்காக மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்தது.

வெற்றி தோல்வி
இது தேர்தலிலும் எதிரொலித்து உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு தரப்பும் இந்த முறை 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அங்கு பெற்றுள்ளன. அதன்படி குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி டிஆர்எஸ் கட்சி சார்பாக 59844 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 55804 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதால் கிட்டத்தட்ட டிஆர்எஸ் வெற்றி உறுதி ஆகி உள்ளது. தீ போல இங்கு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி டிஆர்எஸ் வெற்றிக்கு அருகில் சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்து தேவையின்றி பாஜகவில் இணைந்து எம்எல்ஏ பதவியையும் இழந்து இருக்கிறார் ராஜகோபால் ரெட்டி.












Click it and Unblock the Notifications