ஹைதராபாத் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு.. அதானியிடம் தந்த ரேவந்த் ரெட்டி.. காரணம் தான் ஹைலைட்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான அரசு. ஹைதராபாத் பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின் விநியோகம் மின் கட்டணம் வசூலிப்பது ஆகிய பணிகளை இங்கு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான மின்சார வாரியம் செயல்படுத்துகிறது. அதேநேரம் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்களில் தனியார் மின் விநியோகம் செய்கிறார்கள். அதேநேரம் சில மாநிலங்களில் மின் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனங்களும் செய்கின்றன.

அந்த வகையில் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரப் பகுதியின் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு மற்றும் மின் விநியோக உரிமையை அதானி குழுமத்திற்கு வழங்கும் முடிவினை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எடுத்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அதானி குழுமத்திற்கு மின் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பை தெலுங்கானா மாநில காங்கிரஸ் வழங்கியது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. இதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் பழைய பகுதிகளில் மின் நுகர்வோர் கட்டணத்தைச் செலுத்தாமல் இருப்பதும், மின்வாரிய ஊழியர்கள் அதனை வசூலிக்கச் சென்றால் அந்தப் பகுதி மக்களால் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதன் காரணமாக தனியாரிடம் மின் கட்டணத்தை வசூலிக்கை பொறுப்பை வழங்குகிறோம் என்றார்.
ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியின் முன்னோடி திட்டத்திற்குப் பிறகு, அதானி குழுமத்திடம் ஹைதராபாத் நகர மின் விநியோகப் பொறுப்பை வழங்கவுள்ளதாகவும், அதன் பின்னர் தெலுங்கானா மாநிலம் முழுவதற்குமான பொறுப்பை அதானி குழுமத்திற்கு வழங்க இருப்பதாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் அதானி குழுமத்திற்கு 25%, மாநில அரசுக்கு 75% வழங்கப்படும் என்றும், இதற்கான பேச்சுவார்த்தை இரு தரப்பினரிடையே நடைபெற்று அதில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் ரேவந்த் ரெட்டி கூறினார்.
இந்த முடிவினை கடந்த 10 வருடங்களாக தெலுங்கானா மாநிலத்தை ஆண்டை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மன்னே கிரிஷாங்க் கூறுகையில், "தெலுங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை கௌதம் அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளார் முதல்வர் ரேவந்த் ரெட்டி. இதில், மொத்த வருவாயில் 25 சதவீதம் அளவிற்கு அதானிக்குப் போக இருக்கிறது. இது தெளிவான பகல் கொள்ளையாகும் .
அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்ளுக்கு தெலுங்கானா மாநிலத்தின் பொதுத் துறைகளை ஒப்படைப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தான் என்ன? காங்கிரஸ் கட்சி ஹைதரபாத்தின்பழைய நகரப் பகுதியினரிடம் வைத்திருக்கும் மரியாதை இதுதானா? 'கிருஹ ஜோதி' திட்டத்தின் கீழ் காங்கிரஸ் உண்மையிலேயே மக்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கிறது என்றால், ஹைதராபாத்தில் வீட்டு மின் கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ரேவந்த் ரெட்டியின் அரசு தனியார் நிறுவனத்தை ஈடுபடுத்துவது ஏன்?" என்று கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications