ஓவைசிக்கு ‛செக்’.. அரசியலில் என்ட்ரியாகும் சானியா மிர்சா? ஹைதராபாத்தை கைப்பற்ற காங்கிரஸ் பிளான்
ஹைதராபாத்: வரும் லோக்சபா தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்பியாக உள்ள அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து முன்னாள் டென்னிஸ் வீராங்னை சானியா மிர்சாவை போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார்.

இந்நிலையில் தான் தெலுங்கானாவில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, பிஆர்ஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் மீண்டும் அசாதுதீன் ஓவைசி களமிறங்க உள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான இவர் ஹைதராபாத்தின் சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுகிறார்.
ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் வாக்கு தான் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. இந்நிலையில் தான் ஹைதரபாத்தில் காங்கிரஸ் கட்சி பலமான வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் லோக்சபா தேர்தலில் முன்னாள் டென்னிஸ் வீராங்னையான சானியா மிர்சாவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்திருந்தார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். சோயிப் மாலிக் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் சானியா மிர்சா ஹைதராபாத்தில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் சானியா மிர்சாவை தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.
ஹைதராபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 1980ம் ஆண்டுக்கு பிறகு வெற்றி பெறவில்லை. தற்போது அது ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் கோட்டையாக உள்ளது. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் ஹைதராபாத்தில் காங்கிரஸ் வேட்பாளராக சானியா மிர்சாவை களமிறக்கினால் வெற்றி பெறலாம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரருமான முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
முகமது அசாருதீன் மகன் முகமது அசாதுதீன் சானியா மிர்சாவின் சகோதரியான அனாம் மிர்சாவை 2019ல் திருமணம் செய்தார். இதனால் சானியா மிர்சா மற்றும் முகமது அசாருதீன் குடும்பத்தினர் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இத்தகைய சூழலில் தான் சானியா மிர்சாவை களமிறக்கினால் ஓவைசியை வீழ்த்தி ஹைதராபாத்தில் வெற்றி பெறலாம் என அசாருதீன் மேலிட தலைவர்களிடம் கூறியுள்ளார்.
சானியா மிர்சாவின் புகழ் மற்றும் செல்வாக்கு மற்றும் ஹைதராபாத்தில் சில இடங்களில் ஓவைசியின் மீது நிலவும் அதிருப்தி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சானியா மிர்சாவின் பெயர் ஹைதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னிலையில் உள்ளது. இதனால் விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத் லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி 1980ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் கேஎஸ் நாராயண் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு ஹைதராபாத் லோக்சபா தொகுதி ஏஐஎம்ஐஎம் கட்சியின் கோட்டையாக மாறியது. 1984ல் சுயேச்சையாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் தந்தை சுல்தான் சலாஹுதீன் ஓவைசி வெற்றி பெற்றார். 1989, 1991, 19996, 1998, 1999ல் ஏஐஎம்ஐஎம் சார்பில் மீண்டும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2004 முதல் அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். 2004, 2009, 2014, 2019 என 4 தேர்தல்களில் அசாதுதீன் ஓவைசி வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications