நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு.. அம்மா கண்டித்தார்.. கொன்றுவிட்டேன்.. அதிர வைத்த கீர்த்தி
பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொன்ற 19 வயது மகள் கைது செய்யப்பட்டார்
Recommended Video
ஹைதராபாத்: "நிறைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு எனக்கு இருந்தது.. இதை என் அம்மா கண்டித்தார்.. அதான் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று 19 வயது கீர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஹைதராபாத் துவாரகா காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீனிவாஸ் - ரஜிதா. ஸ்ரீனிவாஸ் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். இவர்களுடைய மகள் கீர்த்தி. 19 வயதாகிறது.
கடந்த 24-ம் தேதி, வெளியூர் லாரி டிரிப்பை முடித்துவிட்டு, ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வந்தார். ஆனால், வீட்டில் மனைவி, மகள் யாருமே இல்லை. இதனால், மகள் கீர்த்திக்கு போன் செய்து எங்கிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி, "நான் விசாகப்பட்டினத்தில் இருக்கிறேன்.. அம்மா எங்கேன்னு எனக்கு தெரியல" என்று சொன்னார்.

விசாரணை
பின்னர், கீர்த்தி ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அப்பாவும், மகளும் இருவரும் சேர்ந்து ரஜிதாவை காணவில்லை என்று ஸ்டேஷனில் புகார் அளித்தனர். சம்பவம் நடந்த சமயத்தில் ஸ்ரீனிவாஸ் ஊரில் இல்லாததால், போலீஸார் கீர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கீர்த்தி, "எனக்கு என்னமோ என் அப்பா மேலதான் சந்தேகமாக இருக்கு. அவர்தான் அடிக்கடி குடிச்சிட்டு வந்து என் அம்மாவை போட்டு அடிப்பார். ஒருவேளை நான் காலேஜ் போனப்புறம், என் அப்பாதான் வந்து என் அம்மாவை கொலை செய்திருக்கணும்" என்றார்.

ஊரில் இல்லை
இதைக் கேட்டு ஸ்ரீனிவாஸ் அதிர்ந்தாலும், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், அந்த ஒரு வாரத்தில் அவர் ஊரிலேயே இல்லை என்பதும், டியூட்டியாக வெளியூர் சென்றிருப்பதும் போலீசாருக்கு உறுதியானது. இதன் பின்னர் தந்தையும் மகளும் இருவருமே ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டனர்.

கீர்த்தி
அதற்கு பிறகுதான் விசாகப்பட்டினத்தில் கீர்த்தி தங்கியிருக்கவில்லை என்பதும், அந்த நேரத்தில், பாய் பிரண்ட் வீட்டில் இருந்ததும் ஸ்ரீனிவாசுக்கு தெரியவந்தது. பின்னர் அவரது நடவடிக்கைகளும் சந்தேகமாகவே இருந்ததால் உடனே போலீசில் இதை பற்றி தகவல் தந்தார். விரைந்து வந்த போலீசார் கீர்த்தியை விசாரிக்க தயாரானார்கள்.

அழுகிய சடலம்
அந்த சமயத்தில், ரமணாப்பேட்டை ரயில் தண்டவாளத்தில் ரஞ்சிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அது அழுகிய நிலையில் கிடந்தது. இதற்கு பிறகு போலீசார் கீர்த்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போதுதான் நடந்த சம்பவங்களை போலீசாரிடம் சொன்னார்.

ஆத்திரம்
"எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்.. எல்லோருடனும் நெருங்கி பழகுவேன்.. இது என் அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. ஆண் நண்பர்களுடன் பழகக்கூடாது என்று என்னை கண்டித்தார். எப்பவுமே கண்டிஷன் போட்டு கொண்டு இருக்கவும் இது எனக்கு பிடிக்கவில்லை. ஆத்திரமாக வந்தது. அதனால், என் ஆண் நண்பர்கள் உதவியுடன் அம்மாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டேன்.

சடலம்
இறந்த பிறகும் என் வீட்டிலேயே அவரது சடலத்தை வைத்து கொண்டிருந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.. அதனால், தற்கொலை செய்து கொள்வது போல இருக்கட்டும் என்று நினைத்து, சடலத்தை தண்டாவளத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டேன்" என்றார். இதையடுத்து, கீர்த்தி, அவரது ஆண் நண்பர்கள் பால் ரெட்டி, ஷஷி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications