தெலுங்கானாவில் இருந்தாலும்.. தமிழகம் மீதுதான் என் முழு நினைப்பும்.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!
தெலுங்கானாவில் இருந்தாலும் நினைவு எல்லாம் தமிழக அரசியல் மீதுதான் இருக்கிறது என்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இருந்தாலும் தன் நினைவு எல்லாம் தமிழக அரசியல் மீதுதான் இருக்கிறது என்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த இவர் தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.

தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், நான் ஆந்திராவிற்கு அடிக்கடி சென்று இருக்கிறேன். ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத்திற்கு அடிக்கடி வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் குறித்து எனக்கு தெரியும்.
இங்கு இருக்கும் அரசியல் தலைவர்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருக்கிறது. இவர்களின் கலாச்சாரம் எனக்கு தெரியும். தெலுங்கானா மாநில மக்களின் அரசியல் விழிப்புணர்வும், அரசியல் அறிவும் எனக்கும் தெரியும். நான் அதை புரிந்து வைத்துளேன்.
அதிக முறை இங்குள்ள மக்களை நேரில் பார்த்ததால் அவர்களை பற்றி நிறைய விஷயம் எனக்கு தெரியும். நான் இங்கும் யாரிடமும் பாகுபாடு காட்டமாட்டேன். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று கூறி இங்கு யாருக்கும் நான் பேதம் காட்ட போவது கிடையாது.
இங்கு பணியாற்றுவதில் எந்தவித சிரமமும் எனக்கு ஏற்படாது என்று நினைக்கிறேன். அதே சமயம் தமிழக மக்களின் நலனுக்காகவும் நான் தொடர்ந்து உழைப்பேன். நான் தெலுங்கானாவில் இருந்தாலும் என் நினைவு எல்லாம் தமிழ்நாட்டில்தான் எப்போதும் இருக்கும் என்று, தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
