கேசிஆர் நேஷனல் லெவல் பிளான்.. தெலங்கானாவில் உதயமானது பாரத் ராஷ்டிர சமிதி தேசிய கட்சி!
ஹைதராபாத்: 2024 மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தாயாராகி வரும் நிலையில், இது தெலங்கானா முதல்வர் கேசிஆர் தனது கட்சி பெயரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி என்பதில் இருந்து, பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றியுள்ளார்.
நாட்டில் அடுத்த மக்களவை தேர்தல் 2024இல் தான் நடைபெறுகிறது. அதற்கு சுமார் 1.5 ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் கூட, அதற்குத் தயாராகும் பணிகளை அனைத்து கட்சிகளும் சத்தமில்லாமல் தொடங்கிவிட்டன.
பாஜகவுக்குத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதே பல எதிர்க்கட்சி தலைவர்களின் எண்ணம். இதற்காகப் பல தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

புதிய கட்சி
குறிப்பாக தெலங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே சந்திரசேகர் ராவ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே இதற்காக அவர் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு, சென்னை வந்து அவர் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசி இருந்தார். இந்தச் சூழலில் அவர் தேசிய கட்சியை ஆரம்பித்து உள்ளார்.

நல்ல நேரம்
ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை உள்ள கேசிஆர், நல்ல நேரம் பார்த்துச் சரியாக 1.19 மணிக்கு புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இந்தப் புதிய கட்சி பாரதிய ராஷ்டிர சமிதி என்று அழைக்கப்படும். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதாவது இனி தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி இருக்கப்போவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்குத் தேசிய அரசியலில் களம் காண வேண்டும் என்ற ஆசை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் கேசிஆர் அமைச்சர்கள் உடனும் கட்சியுள்ள 33 மாவட்ட தலைவர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய கட்சியை ஆரம்பிக்கும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அவர் ஆலோசித்தாக தெரிகிறது. பாஜகவுக்கு எதிராகத் தேசிய அளவில் களமிறங்க கேசிஆர் தேசிய கட்சியை உருவாக்க உள்ளதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

திட்டம்
கட்சியின் கொள்கைகள், திட்டங்களை கேசிஆர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏக்கள் என மொத்தம் 283 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஆர்எஸ் கட்சி சின்னமான கார் நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள கேசிஆர் விரும்புகிறார். கடந்த 8 ஆண்டுகளில் தெலங்கானாவில் ஏற்பட்ட வளர்ச்சி தொடர்பாகப் பல மாநிலங்களுக்குச் சென்று மக்களிடம் விளக்க வேண்டும் என கேசிஆர் இதர தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறார்.

பாஜக அட்டாக்
அதேநேரம் கேசிஆரின் இந்த புதிய கட்சி திட்டத்தை பாஜக கடுமையாகச் சாடி வருகிறது. மாநில வளர்ச்சியில் டிஆர்எஸ் அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்து உள்ள பாஜக, இதனால் மக்கள் மிகவும் கோபமாக உள்ளதாகவும் இதை மறைக்கவே இப்படி தேசிய கட்சி என்ற புதிய நாடகத்தை கேசிஆர் கையில் எடுத்து உள்ளதாகவும் பாஜக மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

ஒரே அணி
2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒன்று திரள வேண்டும் என்று பல முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். 2019இல் பாஜக பெரியளவில் வெல்ல எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததே காரணம் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் கேசிஆர் தேசிய கட்சியைத் தொடங்குவது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications