ஷாக்! பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டியில் பயங்கர தீ.. கோச்சில் இருந்து கீழே குதித்த பயணிகள்!
ஹைதராபாத்: தெலங்கானாவில் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பெட்டிகளும் முழுவதுமாக எரிந்து கருகிப்போன நிலையில் பயணிகள் அலறியடித்து அவசரஅவசரமாக ரயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் தெலங்கனா மாநிலம் செகந்திராபாத் இடையே தினமும் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வழக்கம்போல் ஹவுராவில் இருந்து பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு செகந்திராபாத் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

இந்த ரயில் இன்று காலையில் தெலங்கானா மாநிலம் பொம்மைபள்ளி மற்றும் பகிடிபள்ளி இடையே வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான் திடீரென்று ரயிலின் எஸ்4, எஸ்5, எஸ்6 ஆகிய முன்பதிவு பெட்டிகள் தீப்பிடித்தன. இதனை பார்த்த பயணிகள் அலறினர். உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் பயணிகள் தங்களின் உடைமைகளை எடுத்து கொண்டு வேகவேகமாக வெளியேறினர்.
3 பெட்டிகளிலும் இருந்த பயணிகள் வாசல் வழியாக இறங்கினர். சில பயணிகள் உயிர் பயத்தில் எமர்ஜென்சி டோர் வழியாகவும் கீழே குதித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் தீ வேறு பெட்டிகளுக்கு பரவாமல் தடுத்தனர். மேலும் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் ரயில் பெட்டிகள் கொளுந்துவிட்டு எரிந்தன. இருப்பினும் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் தீவிபத்து காரணமாக ரயிலின் 3 பெட்டிகள் தீயில் முற்றிலுமாக எரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் மின்கசிவு காரணமாக பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த பாதை வழியாக இயங்க கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதோடு சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

முன்னதாக பயணிகள் முன்கூட்டியே ரயிலில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications