சீனுக்குள் வரும் சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவில் ஜெகனுக்கு கடும் போட்டி! வெளியான புது சர்வே!
ஹைதாராபத்: ஆந்திராவில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் எந்தக் கட்சி வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்த புது கருத்துக்கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நடந்து வருகிறது. அவர் முதல்வர் பதவியேற்று 4 ஆண்டுகள் ஆகிறது.

இதற்கிடையே அடுத்தாண்டு லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே தற்போதைய சூழலில் ஆந்திராவில் யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பது குறித்த புது கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஆந்திரா: ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாகக் கடந்த 2014இல் பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தார். 2014-2019 காலகட்டத்தில் தான் ஒய்எஸ்ஆர் ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தனியாகக் கட்சி தொடங்கி மாநிலம் முழுக்க சூறாவளி பிரசாரம் செய்தார். அதன் விளைவாக 2019 தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 கைப்பற்றி இமாலய வெற்றியுடன் ஆட்சியில் அமர்ந்தார்.
தேர்தல்: கடந்த 4 ஆண்டுகளாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருக்கும் நிலையில், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுடன் அடுத்து சட்டசபைத் தேர்தலும் நடக்க இருக்கிறது. அங்கு இப்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து ஊர் ஊராகச் சென்று சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார். அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே சந்திரபாபு நாயுடுவின் இலக்காக இருக்கிறது.
கருத்துக்கணிப்பு: அங்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், யாருக்கு இப்போது மக்கள் ஆதரவு இருக்கிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஸ்மால் பாக்ஸ் இந்தியா என்ற அமைப்பு இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் எந்தக் கட்சிக்கு மக்களின் ஆதரவு இப்போது அதிகம் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் உள்ளன.
இதில் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 45% இடங்கள் கிடைக்கும்.. அதேநேரம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 43% சீட்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல நடிகர் பவன் கல்யாணின் ஜன சேன கட்சிக்கு 9% இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 3% இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடும் போட்டி: அதாவது ஆந்திராவில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. எனவே, கடைசி நேரப் பிரசாரம், கூட்டணி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரம் ஒரு காலத்தில் ஆந்திராவில் அசுர பலத்துடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இப்போது டாப் 3 இடத்தில் கூட இல்லாமல் போனது அக்கட்சிக்குப் பின்னடைவையே ஏற்படுத்துவதாக இருக்கும்.
இந்தக் கருத்துக் கணிப்பை ஸ்மால் பாக்ஸ் இந்தியா என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் குஜராத் (பாஜக), டெல்லி (ஆம் ஆத்மி), இமாச்சல் பிரதேசம் (காங்கிரஸ்), கர்நாடகா (காங்கிரஸ்) எனப் பல தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்துள்ளது. இதனால் ஆந்திரா குறித்த இவர்களின் கணிப்புகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக இதே அமைப்பு மத்தியப் பிரதேச தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளையும் வெளியிட்டிருந்தனர். அதில் காங்கிரஸ் கட்சிக்கு 44% சீட்கள் கிடைக்கும் எனக் கூறியிருந்தனர். மேலும், பாஜகவுக்கு 40% இடங்களும், பகுஜுன் சமாஜ் கட்சிக்கு 5% இடங்களும் கிடைக்கும் எனக் கூறியிருந்தனர். அதேநேரம் சமாஜ்வாதிக்கு 1%, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகளுக்கு 10% இடங்கள் கிடைக்கும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications