இன்டர்ன்ஷிப்பில் கலக்கிய ஹைதராபாத் இளைஞர்.. கூப்பிட்டு ரூ.2.5 கோடியில் வேலை தந்த பிரபல நிறுவனம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்த 21 வயது மாணவருக்கு ரூ.2.5 கோடியில் வேலை கிடைத்துள்ளது. சாதாரண இன்டர்ன்ஷிப்பிற்காக போன அவர், தனது திறமையாலே அங்கேயே 2 கோடி சம்பளத்தில் வேலையைப் பெற்றுள்ளார். யார் இந்த மாணவர்.. வேலைவாய்ப்பு சந்தை மோசமாக இருக்கும்போதும் இதை அவர் சாதித்தது எப்படி என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில காலமாகவே உலகெங்கும் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கிறது. சம்பள பேக்கேஜ்களும் கூட பெரியளவில் உயராமலேயே இருக்கிறது. இருப்பினும், அதையெல்லாம் தாண்டி IIT ஹைதராபாத்தில் படிக்கும் மாணவர் இப்போது புதிய சாதனையைப் படைத்துள்ளார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ₹2.5 கோடி சம்பளத்தில் வேலையைப் பெற்றுள்ளார்.

₹2.5 கோடி சம்பளம்
₹2.5 கோடி சம்பள பேக்கேஜ்ஜை பெற்ற அவர் 21 வயதான எட்வர்ட் நாதன் வர்கீஸ்.. இறுதி ஆண்டு பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் எட்வர்ட், சர்வதேச வர்த்தக நிறுவனமான ஆப்டிவர் (Optiver) நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகச் சேரவுள்ளார். கடந்த 2008ல் ஐஐடி ஹைதராபாத் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு மாணவருக்கு இந்தளவுக்குச் சம்பளம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.
நெதர்லாந்தில் உள்ள ஆப்டிவர் நிறுவன அலுவலகத்தில் வர்கீஸ் வரும் ஜூலை மாதம் முதல் வேலை செய்ய ஆரம்பிப்பார். வழக்கமாக மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாகவே வேலை தேடுவார்கள். ஆனால், எட்வர்ட் அங்கு இன்டர்ன்ஷிப் செய்த நிலையில், அங்கு வேலை செய்தபோதே இந்த வேலை கிடைத்துள்ளது.
இதுவே முதல்முறை
ஐஐடி ஹைதராபாத்தில் ஒருவர் கிடைத்த மிகப் பெரிய சம்பள பேக்கேஜ் இதுவாகும்.. முன்னதாக 2017ல் ₹1 கோடி சம்பள பேக்கேஜில் ஒருவர் வேலை சேர்ந்திருந்தார். அதன் பிறகு பெரும்பாலான மாணவர்கள் ₹60 லட்சம் முதல் ₹90 லட்சம் வரையிலான சம்பள பேக்கேஜ்களிலேயே வேலைக்குச் சேர்ந்து வந்தனர். இந்தச் சூழலில் தான் எட்வர்ட் இப்போது வரலாறு படைத்துள்ளார்.
இன்டர்ன்ஷிப்
எட்வர்ட்டிற்கு முதலில் ஆப்டிவர் நிறுவனத்தில் இரண்டு மாத இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த இன்டர்ன்ஷிப்பில் அவர் மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்திய நிலையில், அப்படியே அவருக்கு வேலையும் கிடைத்து இருக்கிறது. இந்த இன்டர்ன்ஷிப்புக்கு ஐஐடி ஹைதராபாத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் தேர்வான போதிலும், எட்வர்டிற்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
இது தொடர்பாக எட்வர்ட் கூறுகையில், "நான் நேர்காணலில் பங்கேற்ற முதல் மற்றும் ஒரே நிறுவனம் இதுதான். என் வழிகாட்டி வாய்ப்பு வரும் எனக் கூறியபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டதும் குடும்பத்திற்கு மகிழ்ச்சி.. வேலைவாய்ப்பு சந்தை குறைவாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், ஐஐடி என்ற பிரண்ட்டே கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும். அதுவும் எனக்கு உதவியாக இருந்தது" என்றார்.
யார் இந்த எட்வர்ட்
ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த வர்கீஸ், 7 முதல் 12ம் வகுப்பு வரை பெங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தார். வேலைவாய்ப்பு சூழல் மந்தமாக இருக்கும் போதிலும் இவரது திறமையே இந்தச் சம்பளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. Competitive Programmingஇல் இவருக்கு நீண்ட ஆர்வம் இருந்துள்ளது. ஐஐடியில் சேர்ந்தது முதலே பல புரோகிராமிங் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதுவும் கூட நேர்காணலில் கைகொடுத்தாக எட்வர்ட் கூறுகிறார்.
இது அவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக ஐஐடி ஹைதராபாத்திற்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதே ஐஐடி ஹைதராபாத்தில் மற்றொரு மாணவர் ₹1.1 கோடி சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது
ஐஐடி ஹைதாராபத்
நடப்பாண்டில் ஐஐடி ஹைதராபாத்தில் வேலைவாய்ப்பு சந்தை மேம்பட்டே இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சராசரி சம்பளத் தொகுப்பு சுமார் 75 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024ல் ₹20.8 லட்சத்தில் இருந்த சராசரி சம்பள பேக்கேஜ் இந்த ஆண்டு ₹36.2 லட்சமாக உயர்ந்துள்ளது. டிசம்பரில் நிறைவடைந்த முதல் கட்ட நேர்காணல்கள் முடிவில் மாணவர்கள் 24 சர்வதேச ஆஃபர்களை பெற்றனர்.












Click it and Unblock the Notifications