மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் AK-47 உள்ளிட்ட அதிநவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள் திருட்டு! பரபரப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் வளாகத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ பொருட்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான சேமிப்பு பகுதியில் இருந்து ஆயுதங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் பல்வேறு ரெஜிமென்ட்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் முக்கியமான ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமென்ட். இந்திய ராணுவத்தின் மிக பழமையான காலாட்படை பிரிவுகளில் ஒன்றான இதன் தலைமையகம் ஊட்டியில் உள்ள வெலிங்டனில் அமைந்திருக்கிறது.

மெட்ராஸ் ரெஜிமென்ட்
அதேநேரம் இதன் கீழ் இயங்கும் 20வது மெட்ராஸ் ரெஜிமென்ட் உள்ளிட்ட சில பட்டாலியன்கள் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பொல்லாரம் ராணுவ முகாமில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இங்கு எப்போதுமே உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அவ்வளவு ஈஸியாக யாராலும் உள்ளே சென்றுவிட முடியாது.
ஆயுதங்கள் திருட்டு
அப்படி பாதுகாப்பான பாதுகாப்பு படை வளாகத்தில் இருந்து தான் ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ராணுவ பொருட்கள் மாயமாகியுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் வளாகத்தில் இருந்து 4 AK-47 துப்பாக்கிகள், 6 பிஸ்டல்கள் மற்றும் 1 INSAS துப்பாக்கி ஆகியவை மாயமாகியுள்ளன. இதுதவிர, வெடிமருந்துகளும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இந்த ஆயுதங்கள் மாயமானது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திங்கள்கிழமை பொல்லாரம் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். மெட்ராஸ் ரெஜிமென்ட் வளாகம் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால்.. அங்கு ஆயுதங்கள் காணாமல் போனது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தீவிர விசாரணை
ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு பகுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே செல்ல முடியும் என கூறப்படுகிறது. எனவே யார் யார் அந்த பகுதிக்குள் சென்றனர்.. ஆயுதங்கள் எப்போது கடைசியாக சரிபார்க்கப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஆயுதங்கள் எப்போது மாயமானது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க போலீசார் முயன்று வருகிறார்கள்.
ராணுவ வளாகத்தில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இருப்பினும், இதுவரை யாருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தெரிகிறது.
கண்டறிய முயற்சி
மேலும், சம்பவம் தொடர்பாக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. ஆயுதங்கள் ஒரே நேரத்தில் மாயமானதா அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் அவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செல்லப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் கண்டறிய முயன்று வருகின்றனர். ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்ற முக்கியமான ராணுவ பொருட்களை எப்படி கணக்கு பார்த்து, பாதுகாப்பாக வைக்கிறார்கள்.. அதன் நடைமுறை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட ராணுவ வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் காணாமல் போயிருப்பது அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாயமான ஆயுதங்களை மீட்பதுடன், அவை எதற்காகவும் யாரால் எடுத்துச் செல்லப்பட்டன என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குற்றச்சதி?
இந்த சம்பவம் ஏதேனும் பெரிய குற்றச் சதியுடன் தொடர்புடையதா என்பதும் குறித்தும் விசாரணை நடக்கிறது. அதாவது இந்த ஆயுதங்களை எடுத்து அதை வேறு ஏதேனும் மோசமான சம்பவங்களில் பயன்படுத்த திட்டம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இதுகுறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
ராணுவ அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து விசாரணையை தொடர்ந்து வரும் நிலையில், வரும் நாட்களில் மேலும் பல முக்கிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
