இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை தூக்கி முகத்தை காட்ட சொன்ன சம்பவம்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா விளக்கம்
ஹைதராபாத்: நான் ஒரு வேட்பாளர், ஒருவரின் அடையாள அட்டையை சரி பார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு உள்ளது என பாஜக வேட்பாளர் மாதவி லதா விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் 18-ஆவது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.

அந்த வகையில் இன்று 4-வது கட்ட தேர்தல் 96 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் 17 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் ஓவைசி போட்டியிடுகிறார். அதே தொகுதியில் மாதவி லதா அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இன்று வாக்களிக்க இஸ்லாமிய பெண்கள், மாதவி லதா இருந்த வாக்குச் சாவடிக்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம் சென்ற மாதவி, அவர்களிடம் ஆதார் கார்டை கேட்டார். அவர்களும் கொடுத்தனர். அப்போது அந்த ஆதார் கார்டை பார்த்த மாதவி, அவர்களுடைய ஹிஜாப்பை தூக்கி முகத்தை காட்டுமாறு மிரட்டியதாக தெரிகிறது. அவர்களின் முகத்தை பார்த்த பிறகுதான் அவர்களை வாக்களிக்க மாதவி அனுமதித்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போல் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களிடம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படமும் அவர்களும் ஒன்றா என பார்க்க ஹிஜாப்பை தூக்கி காட்ட சொன்னார். இதை போலீஸாரும் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளும் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
மாதவி தேர்தல் பிரச்சாரத்தின் போது மசூதியை பார்த்து அம்பு எய்வது போல் சைகை காட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் மாதவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஹிஜாப்பை மாதவி தூக்கி காட்ட சொன்ன சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். மாதவி கூறுகையில், நான் ஒரு வேட்பாளர். ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு உள்ளது.
உங்கள் ஐடி கார்டை காட்டுங்கள் என தன்மையாகவே நான் கேட்டேன். இதை போய் யாராவது பெரிதாக்க நினைத்தால் அவர்களுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். மேலும் ஐடி கார்டையும் இஸ்லாமிய பெண்களையும் சோதனை செய்யுங்கள் என தேர்தல் அதிகாரியிடம் நான் சொன்னேன். ஆனால் அவரோ அது என் வேலை இல்லை என சொல்லிவிட்டார்.
பெண் காவலர்களிடமாவது சொல்லி சோதனை செய்ய சொல்லுங்கள் என நான் கேட்ட போது அவர் அதே பதிலை சொல்லிவிட்டார். நான் நியாயத்திற்காகத்தான் போராடினேன். பிறகு எதற்காக நான் கவலைப்பட வேண்டும். இவ்வாறு மாதவி லதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications